அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான படம் லப்பர் பந்து. கடந்த மாதம் 20ம் தேதி வெளியான இந்த படம், ரசிகர்களின் மத்தியில் அமோக ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண் இரட்டை நாயகர்களாக நடித்துள்ளனர்.
பார்க்கிங் படத்துக்கு பிறகு, லப்பர் பந்து படம் பெரிய அளவில் ஹரீஷ் கல்யாணுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து 3 பவுன் தங்கச் சங்கிலியை ஹரீஷ் கல்யாண் பரிசாக வழங்கினார். அவர் தங்க செயினை தமிழரசன் பச்சமுத்துவுக்கு அணிவிக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.
லப்பர் பந்து படத்தை தயாரிப்பாளர் லட்சுமண் குமார் தயாரித்துள்ளார். இவர் நடிகர் கார்த்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. லப்பர் பந்து படத்தின் படப்பிடிப்பு நடந்த போது, சில தினங்கள் கார்த்தி அங்கு வந்து படப்பிடிப்பை பார்த்துள்ளார். அப்போது தயாரிப்பாளர் லட்சுமண் குமாரும் உடனிருந்தார்.
லப்பர் பந்துக்கு முதலில் வைத்த பெயர் ஜப்பான். கெத்து தினேஷ் அணிந்திருந்த பனியனில் கூட ஜப்பான் என்றுதான் பெயர் இருந்துள்ளது. அப்போது ராஜூ முருகன் இயக்கத்தில், கார்த்தி தனது 25வது படத்தில் நடிக்க துவங்கியிருந்த நேரம் அது. அப்போது படத்துக்கு டைட்டில் வைக்கப்படவில்லை.
அதனால் ஜப்பான் பெயரை பார்த்த நடிகர் கார்த்தி, அந்த பெயர் மிகவும் பிடித்துப் போய், என்னுடைய 25வது படத்துக்கு இன்னும் டைட்டில் கிடைக்கவில்லை. எனக்கு இந்த ஜப்பான் என்ற பெயர் பிடித்திருக்கிறது. இதையே டைட்டிலாக வைத்துக்கொள்கிறேன் என கேட்டிருக்கிறார். தயாரிப்பாளர் லட்சுமண் குமாரும் உடனே ஓகே சொல்லி விட, அந்த டைட்டிலில் கார்த்தி தனது 25 வது படத்தில், ராஜூ முருகன் இயக்கத்தில் நடித்தார்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த ஜப்பான் படம் குறித்து ரசிகர்களிடம் சொல்ல தேவையே இல்லை. இந்தியன் 2 படத்துக்கு முன்பே ரசிகர்களை கதற விட்ட பெருமையை ஜப்பான் படம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் டைட்டிலை கார்த்தி வாங்கிக் கொண்டதால், அதன்பிறகுதான் இந்த படத்துக்கு லப்பர் பந்து என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எப்படியோ, ஜப்பான் டைட்டிலில் இருந்து லப்பர் பந்து படத்தை நடிகர் கார்த்தி காப்பாற்றி விட்டார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





