புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் இது. ஒருமுறை மதுரையில் நடந்த மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர் எம்ஜிஆர் மதுரை சென்றிருக்கிறார். அப்போது காரில் திருமங்கலம் பகுதியில் அவர் காரில் போய்க்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென தனது டிரைவர் கதிரேசனிடம் காரை நிறுத்தச் சொன்ன எம்ஜிஆர், தனது உதவியாளர்களை அழைத்து அங்கே தூரத்தில் ஒரு நபரை சிலர் மரத்தில் கட்டி வைத்து அடிக்கிறார்கள். என்னவென்று விசாரித்து அவர்களை அழைத்துக்கொண்டு இங்கு வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
அடுத்த சில நிமிடங்களில் மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட ஒரு இளைஞரும், நடுத்தர வயதுள்ள ஒரு நபரும் இன்னும் சில ஆட்களும் எம்ஜிஆர் கார் இருந்த இடத்துக்கு வந்தனர். எம்ஜிஆரை நேரில் பார்த்த அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அப்போது கோபமாக இருந்த எம்ஜிஆர், எதற்காக அந்த வாலிபரை கட்டி வைத்து அடித்தீர்கள் என்று விசாரித்தார்.
அதற்கு நடுத்தர வயது ஆசாமி, இவன் எங்கள் வீட்டு பெண்ணை புகைப்படம் எடுத்து விட்டான். அதற்காக தான் அடித்தோம் என்று கூறியிருக்கிறார். அந்த இளைஞரிடம் எம்ஜிஆர் கேட்ட போது, ஆமாங்க. நான் அந்த பெண்ணை புகைப்படம் எடுத்தது உண்மை தான். நான் ஒரு போட்டோகிராபர். ஸ்டுடியோ கடை வைத்திருக்கிறேன்.
நானும் அந்த பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். அந்த உரிமையில் அந்த பெண்ணின் சம்மதத்துடன் புகைப்படம் எடுத்தேன் என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த நடுத்தர வயது ஆசாமியிடம் பேசிய எம்ஜிஆர், அந்த தம்பி ஸ்டுடியோ வைத்திருக்கிறார். சம்பாதிக்கும் திறமை உள்ளவர். உங்கள் பெண்ணும் அவரை விரும்புகிறார். பிறகு எதற்கு அவரை இப்படி அடித்தீர்கள்?
அவர் இந்த பிரச்னையை போலீஸ்சில் சொன்னால் என்ன நடக்குமா என்று கேட்டிருக்கிறார். அங்கிருந்தவர்கள் அனைவரும் எம்ஜிஆர் காலில் விழுந்திருக்கின்றனர். அதன்பிறகு சில வாரங்களில் அந்த போட்டோகிராபருக்கே அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு திருமண வாழ்த்தும் பரிசு பொருட்களையும் எம்ஜிஆர் அனுப்பி வைத்திருக்கிறார்.





