நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். தி கோட் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை, இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்திருக்கிறார். வசீகரா படத்துக்கு பிறகு, சினேகா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் தி கோட் படத்துக்கு பல சிறப்புகள் உள்ளன. கடந்த 1990களில் கொடிகட்டி பறந்த முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரான பிரசாந்த் இந்த படத்தில் மீண்டும் ரீ என்ட்ரி தந்திருக்கிறார். வெள்ளிவிழா நாயகன் நடிகர் மைக் மோகன் நீண்ட இடைவெளிக்கு பின் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். போக்கிரி, வில்லு படங்களுக்கு பிறகு மீண்டும் விஜயுடன் பிரபுதேவா இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.
தி கோட் படத்தை பொருத்தவரை, இதுவரை 2 பாடல்கள் வெளிவந்து இருக்கின்றன. அதில் விசில் போடு பாடல், பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. அதே போல் சின்ன சின்ன கண்ணில் பாடலும் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்த 2 பாடல்களுமே யுவன் சங்கர் ராஜா இசையில் ரசிகர்களுக்கு ஹைப் ஏற்றவில்லை. வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வரும் 3வது பாடலை தான் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.
இந்த சூழலில், இப்போது தி கோட் படம் குறித்து, ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேச்சோ, விஜய் குறித்த பரபரப்போ இல்லை. ஆனால் லியோ படம் உருவான போது, தினமும் லியோ லியோ என்றும் லோகேஷ் கனகராஜ் குறித்தும், விஜய் குறித்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹைப் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது படத்துக்கு பெரிய பிரமோவாக இருந்த போதிலும், அதுவே படத்தின் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
அதனால் தி கோட் படம் குறித்து, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும், பரபரப்பும், ஹைப்பும் இல்லாத சூழலில் இப்படியே அது நீடித்தால் படம் ரிலீஸ் ஆகும்போது, ரசிகர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவர். படம் பிடித்துப் போய் பெரிய அளவில் வெற்றி பெறும். அல்லது பிளாப் ஆகாமல் நிச்சயமாக தப்பிக்கும் என்று தயாரிப்பாளர் தரப்பில் நினைக்கின்றனர். ஆனால், தமிழக வெற்றிக் கழகம் கண்மணிகள், ரசிகர்களுடன் இணைந்து படம் ரிலீஸ் ஆகும்போது பயங்கர அலப்பரை செய்து படத்துக்கு ஹைப் செய்து விடுவார்களே, என்றும் ஒரு தரப்பினர் கிண்டலடித்து வருகின்றனர்.





