வரும் 19ஆம் தேதி விஜயின் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் உடன் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு காஷ்மீர் சென்னை ஆந்திர மாநிலம் தலக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. தற்போது இறுதி கட்டமாக போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. தனது முந்தைய திரைப்படமான விக்ரமில் எல் சி யு என்னும் கான்செப்டை லோகேஷ் கனகராஜ் அறிமுகப்படுத்தி அதில் வெற்றி கண்டதால், இதிலும் அதை தொடர்வாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பாளர் லலித் குமார் திட்டமிட்டு இருந்தார். வரும் 30 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் திடீரென இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக லலித் குமார் அறிவித்தார்.
கடைசி நேரத்தில் அதிக பாஸ்கள் கோரிக்கை வருவதாகவும், பாதுகாப்பு காரணத்திற்காகவும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, லியோ படத்திலிருந்து இரண்டாம் பாடல் இன்று மாலை வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. Badass எனத் தொடங்கும் அந்தப் பாடலின் ப்ரோமோவையும் படக்குழு வெளியிட்டது.
இதில் லியோ தாஸ் என்று கேரக்டரில் விஜய் நடிக்கிறாராம். ஏற்கனவே சஞ்சய்தத் ஆன்டனி தாஸ் என்ற ரோலிலும், அர்ஜுன் ஹார்ட் தாஸ் என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது இவரது பெயரும் தாஸ் என்றே முடிந்திருப்பதால் மூன்று பேரும் அண்ணன் தம்பியாக இருக்கலாம் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். அதேசமயம் சஞ்சய் தத்துடன் விஜய் மோதும் படியான ஒரு போஸ்டர் வெளியாகி இருந்ததால், தாஸ் பிரதர்ஸுக்குள் மோதல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு லியோ படத்தை லலித்குமார் விற்று இருக்கிறாராம். ஒரு திரைப்படம் மாநிலத்திற்குள் இதுவே அதிக ரூபாய்க்கு விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் லலித் குமாரே படத்தை வெளியிடுகிறார். இதனிடையே ரெட் ஜெயன்ட் மூவிஸிடம் லியோ படத்தை விற்பது தொடர்பாக லலித் குமார் அணுகி இருக்கிறாராம். ஆனால் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் இதற்கு விருப்பம் காட்ட வில்லை என்று கூறப்படுகிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனமே முதலில் படத்தைக் கேட்டு மிரட்டியதாக சிலர் புகார் கூறிய நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் இந்த தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.





