நடிகர் விஜய் இப்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். வழக்கமான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில், விஎப்எக்ஸ் தொழில்நுட்ப காட்சிகளுக்காக, அமெரிக்கா சென்ற விஜய், லாஸ்ஏஞ்சல்ஸ்சில் உள்ள ஸ்பெஷல் ஸ்டுடியோவில் இதற்கான பிரத்யேக ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.
இயக்குனர் வெங்கட்பிரபுவை பொருத்தவரை ஜாலியான படங்களை எடுக்கும் பேர்வழி என்று பெயர் வாங்கியவர். தன் நண்பர் கூட்டத்தை நடிக்கவிட்டு, ஏதோ பிக்னிக் சென்று வந்தது போன்ற உணர்வையே அவரது படங்கள் ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். அதனால் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படமும் ஜாலியான ஒரு படமாக, பொழுதுபோக்காக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் அதே நேரத்தில் விஜய் படங்களுக்கு என ஒரு தனிப்பார்வை ரசிகர்களிடம் உள்ளது. அதுவும் விஜய் ரசிகர்களுக்கு அவரது மாஸ் காட்சிகளும், பில்டப் காட்சிகளும் அதிகளவில் தேவைப்படும். அந்த தேவையை வெங்கட்பிரபு பூர்த்தி செய்வாரா என்ற கேள்வி விஜய் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.
இந்த படத்தில் 1990களில் டாப் ஸ்டாராக இருந்த பிரசாந்த் நடித்திருக்கிறார். அவருக்கு மிகவும் முக்கியமான கேரக்டர் என்று சொல்லப்படுகிறது. அதே போல் மைக் மோகனும் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். விஜய் இரட்டை ரோலில் நடித்திருக்கிறார். இப்படி மெகா ஹீரோக்களுக்கு எப்படி முக்கியத்துவம் இருக்கும் என்ற சந்தேகமும், கேள்வியும் ரசிகர்களுக்கு உள்ளது.
இதற்கிடையே மறைந்த நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், காமெடி நடிகர் விவேக் போன்றவர்களையும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் களத்தில் இறக்கி விட்டுள்ளார் வெங்கட்பிரபு. அவர்களும் சில காட்சிகளில் வருகின்றனர். அதே போல், அடுத்த விஜய் என்று சொல்லப்படுகிற சிவகார்த்திகேயன். இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் பிஸ்மி கூறுகையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு காரணம், வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ அவர்தான். அதனால் விஜயிடம் அனுமதி கேட்டு, சிவகார்த்திகேயனை கோட் படத்தில் நடிக்க வைத்திருப்பார். மற்றபடி விஜய்க்கு, சிவகார்த்திகேயன் தன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எல்லாம் இல்லை. ஆனால், சிவகார்த்திகேயன் தனது படத்தில் நடிப்பதன் மூலம், அவரது ரசிகர்களும் வரும் தேர்தலில் தன் கட்சிக்கு ஓட்டுப் போட முன்வரலாம் என்றும் விஜய் கணக்கு போட்டிருக்கலாம் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





