தமிழ் சினிமாவில் கொண்டாடப்படுபவர் கவிஞர் வைரமுத்து. கவிப்பேரரசு என்றும் அழைக்கப்படுபவர். இலக்கிய உலகில் கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் போன்ற அற்புத படைப்புகளை தந்தவர். திமுக ஆதரவாளரான வைரமுத்து மீது தனிப்பட்ட விமர்சனங்கள் நிறைய இருந்தாலும் கவிஞராக எழுத்தாளராக அவர் பாராட்டுக்களுக்கு உரியவர். பெருமை மிகு படைப்பாளியாகவே மதிக்கப்படுகிறார்.
தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோரிடம் மிகுந்த நட்பும் நெருக்கமும் கொண்டவர். எப்போது வேண்டுமானாலும் கமல் ரஜினியை நேரில் சந்திக்கும் அளவுக்கு அவர்களது மிக நெருங்கிய நண்பராக இருப்பவர். ரஜினி கமல் பாடிய பல நூறு பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்துதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனை, கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து உரையாடி உள்ளார். அதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கவிஞர் வைரமுத்து செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நட்பு நிமித்தமாக நண்பர் கமல்ஹாசனை சந்தித்தேன்.
ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார். அரசியல் பேசினோம்; கலை குறித்து கலந்தாடினோம். உடல்நிலை உணவு நிலை குறித்து அறிவாடினோம். சமூக ஊடகங்கள் குறித்து தெளிவு பெற்றோம். செயற்கை நுண்ணறிவில் உங்களுக்கு பயிற்சி உண்டா என்றார். செயற்கை நுண்ணறிவை கவிதைக்கு பயன்படுத்தினேன் ஆனால் அதில் ஜீவன் இல்லை என்றேன்.
அடுத்த படத்திற்கான தலைப்பை சொன்னார்; நன்று, யார் சொன்னாலும் மாற்றாதீர்கள் என்றேன். டெல்லி பட்டணத்திற்கான சமிக்ஞை தெரிந்து கொண்டேன், மகிழ்ச்சி விடைகொண்டேன் என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து தனது கமல் சந்திப்பு குறித்து அதில் கூறியிருக்கிறார்.
அதாவது ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கும் தனது 237வது படத்தின் தலைப்பை கமல்ஹாசன், இந்த சந்திப்பின் போது ரகசியமாக வைரமுத்துவிடம் கூறியிருக்கிறார். அவர் ரகசியமான சொன்ன தகவலை இப்போது தனது பதிவின் மூலம் அம்பலப்படுத்தி விட்டார் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெயரை மாற்றாதீர்கள் என்ற வைரமுத்துவின் அட்வைஸில் இருந்தே அது சர்ச்சையை கிளப்பும், விமர்சனத்துக்குரிய ஒரு தலைப்பாக தான் இருக்கும் என்பதும் உறுதியாகி விட்டது.





