நடிகர் ரஜினிகாந்த் இப்போது, தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படம். இந்த படத்தின் படப்பிடிப்பு, இன்னும் 20 தினங்களில் முடிவடைய இருக்கிறது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்துள்ளது.
அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்தது. அதன்பிறகு சென்னை பிரசாத் ஸ்டுடியோ, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 171 படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் சிவகார்த்திகேயன், ஜீவன், நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டாலும், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
மாநகரம், கைதி, விக்ரம் படங்களை மெகா ஹிட் படங்களாக கொடுத்த டைரக்டர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திலும், லியோ படத்திலும் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்த முடியவில்லை. அதுவும் லியோ படத்தின் செகன்ட் ஆப், ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றத்தில் தள்ளியது.
அதுபோன்று எந்தவிதமான குளறுபடியும் இல்லாமல், ரஜினி 171 படத்தை தரவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்குவதாக லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். ஏனெனில் ஸம்மர் சீசனில் வெயில் கொளுத்தி வருவதால் ரஜினிகாந்த், ஏப்ரல் மாதம் திட்டமிட்டிருந்த படப்பிடிப்பை, ஜூன் மாதம் தள்ளி வைத்ததாக கூறப்பட்டது.
ஆனால் இப்போது மே 1ம் தேதி, ரஜினி 171 படப்பிடிப்பை துவக்க ரஜினி கூறிவிட்டார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று படப்பிடிப்பை துவங்கும் ரஜினி, 30 நாட்கள் இங்கு நடக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். தொடர்ந்து ஐதராபாத்தில் ரஜினி 171 ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் 73 வயதிலும் தலைவர் ரஜினி எடுத்துள்ள இந்த முடிவை பார்த்து ரசிகர்கள், தலைவர் தலைவர்தான் என பாராட்டி வருகின்றனர்.





