நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகளுக்காக, படத்தின் சிஜி டீம் மற்றும் டைரக்டர் வெங்கட்பிரபு அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டுடியோவில் முகாமிட்டுள்ளனர்.
விஎப்எக்ஸ் தொழில்நுட்ப காட்சிகளுக்காக விஜயை வைத்து பிரத்யேக ஷூட் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற விஜய், அங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோவில் நடந்த ஸ்பெஷல் ஷூட்டிங் பங்கேற்றுள்ளார். இதில் விஜய் அப்பா, மகன் 2 வேடங்களில் நடிப்பதால், மகன் விஜயை இளமையாக காட்ட டீஏஜிங் செய்யப்பட்டுள்ளது.
த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது. விசில் போடு என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. எனினும் வழக்கமான விஜய் பாடலைப் போல துள்ளலும், துறுதுறுப்பும், விறுவிறுப்பும் இல்லை என்றே ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது.
வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தில் இந்த படம் ரிலீசாகிறது. அதற்கு முன்பாக விஜய் பிறந்த நாளில் ஜூன் 22ம் தேதி படத்தின் செகன்ட் சிங்கிள் வௌியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தரப்பில் இருந்து அறிவிக்கவில்லை.
அமெரிக்காவில் இருந்து விஜய் சென்னை திரும்பிய பிறகு, சமீபத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்க பரிசுகளை வழங்க இருக்கிறார். கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் இந்த விஜய் விருது விழாவை மிக சிறப்பாக கொண்டாட விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் கதை குறித்த விஷயங்கள் வெளியே கசிந்துள்ளது. அதாவது இந்த படத்தின் மெயின் ஸ்கிரிப்டை கேரளாவில் சென்று தங்கியுள்ள எச். வினோத் எழுதி வருகிறார். இந்த படத்தின் கதை, மக்களுக்காக போராடுகிற ஒருவரை, மக்கள் தலைவராக ஏற்றுக்கொள்வதுதான் படத்தின் ஸ்கிரிப்ட். அரசியல் களத்துக்குள் நுழைய ஏதுவாக இப்படி ஒரு கதையில் கடைசியாக நடிக்கிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.




