நடப்பாண்டில் 300க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வெளியான நிலையில் இதில் சூப்பர் ஹிட் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். குறிப்பாக எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக இருந்தது கவனிக்கத்தக்கது. இதில் நட்சத்திர நடிகர்களின் படங்கள் கூட எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. 100 கோடி ரூபாய் வசூலித்த சில படங்கள் கூட விமர்சன ரீதியாக மொக்கை படங்களாக தான் இருந்தன.
அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த கூலி கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி குட் பேட் அக்லி தனுஷ் நடித்த குபேரா இட்லி கடை என பல படங்கள் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தான் தந்தன. இந்த படங்கள் வணிக ரீதியான வெற்றியை பெற்றாலும் ரசிகர்களின் மத்தியில் பாராட்டப்படும் படங்களாக இருக்கவில்லை.
அதே நேரத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படமும் கடும் விமர்சனத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. பைசன் படமும் கலவையான விமர்சனங்களை பெற்ற படமாக இருந்தது. கன்னடத்தில் உருவாகி தமிழில் வெளியான காந்தாரா சாப்டர் 1 படம் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு ஆன்மிக படமாக இருந்தது. இந்த படம் ரூ. 800 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த 2025ம் ஆண்டை பொருத்த வரை இப்போது டிசம்பர் மாதம் பிறந்துவிட்டது. இனி இந்த மாத இறுதிக்குள் வரும் படங்கள் எதுவும் பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களாக இல்லை. எனவே இதுவரை இந்த ஆண்டில் வெளியான படங்களில்
அதிகபட்சமாக 5 படங்கள் மட்டுமே ரசிகர்களின் மனம் கவர்ந்த நல்ல படங்களாக கருதப்படுகின்றன. 300 படங்களில் 5 படங்களே சிறந்த படங்கள் என்பது தமிழ் சினிமாவில் அவல நிலையை வெளிப்படுத்துகிறது.
அதில் சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா, சசிக்குமார் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி, அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன், பாண்டிராஜ் இயக்கிய தலைவன் தலைவி மற்றும் சூரி நடித்த மாமன் போன்ற 5 படங்களே சிறந்த படங்களாக ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. இந்த படங்களே ஓரளவுக்கு ரசிகர்களை திருப்திபடுத்திய படங்களாக இருந்திருக்கின்றன.
கமர்ஷியல் என்ற பெயரில் படம் முழுவதும் வன்முறை காட்சிகள் நிறைந்த ஆக்சன் படங்களை தரும் இயக்குனர்களால் தமிழ் சினிமா ரசிகர்கள் விரக்தியான மனநிலைக்கு மாறியிருக்கின்றனர். ஓரளவுக்கு கதையம்சம் ரத்து பார்க்கும் விதமான திரைக்களத்தில் உருவான படங்களை பார்க்கவே ரசிகர்கள் விரும்புகின்றனர். 2026ம் ஆண்டிலாவது அதுபோன்ற நல்ல படங்களை தர இயக்குனர்கள் முன்வர வேண்டும்.





