நடிகர் சமுத்திரக்கனி மற்றும் நடிகர் பரத் இணைந்து நடித்த வீரவணக்கம் என்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், சிதம்பரம் தொகுதி எம்பி தொல் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அந்த விழாவில் தொல் திருமாவளவன் நடிகர் விஜய் நடத்திய மதுரை மாநாடு குறித்த தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
அந்த விழாவில் தொல் திருமாவளவன் பேசியதாவது, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டில் முதலமைச்சராக மாறி ஆட்சி செய்த உதாரணங்கள் இருக்கின்றன. அதனால் தான் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அரசியல்வாதிகளை விடவும் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள். 40 ஆண்டுகள் 50 ஆண்டுகள் அரசியல் களத்தில் இருப்பவர்களின் போக்குகளை துணிந்து விமர்சிக்கக் கூடிய வகையில் அரசியல் வயப்பட்டுள்ளார்கள்.
அது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் கூடுதலாக உள்ளது. எனவே திரை மாயை மட்டும் ஆட்சியைப் பிடிக்க போதாது. தமிழ்நாட்டு மக்கள் அப்படி ஏமாற மாட்டார்கள் என்று நம்புகிறேன். திரைத்துறையில் செல்வாக்கு பெற்றவர்களுக்கு லட்சக்கணக்கில் மக்கள் திரள்வது என்பது இயல்பான ஒன்றுதான். ஆந்திராவில் சிரஞ்சீவி பவன் கல்யாண் தமிழ்நாட்டில் விஜயகாந்த் உட்பட விஜய் வரையில் பார்க்கிறோம்.
ஆனால் அவர்களால் கடைசி வரை தாக்குப்பிடித்து நிற்க முடிகிறதா என்ற கேள்வி எழுகிறது. ரசிகர் பட்டாளம் என்பது வேறு. அரசியல் வயப்பட்ட களப்பணியாளர்கள் என்பது வேறு. ஆட்சியை கைப்பற்ற சில லட்சம் பேர் போதாது. 5 லட்சம் முதல் 10 லட்சம் பேர் ஒரு இடத்தில் திரண்டால் உங்களுக்கு பிரமிப்பை உருவாக்கும். ஆனால் அது ஆட்சிக்கு பயன்படாது. அதை வைத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விடும் என்று சொல்லிவிட முடியாது.
கட்சி தொடங்கி இரண்டு மாநில மாநாடுகளை விஜய் நடத்தியிருக்கிறார். இரண்டுக்கும் முதல் மாநாடு 2வது மாநாடு என்றுதான் பெயர் சூட்டியிருக்கிறார்கள். கருத்தியல் சார்ந்து அந்த மாநாடுகளுக்கு பெயர் சூட்ட முடியவில்லை. நாங்கள் வெல்லும் ஜனநாயக மாநாடு, தேசம் காப்போம் மாநாடு, மது ஒழிப்பு மாநாடு என கருத்தியல் சார்ந்து மாநாடு நடத்தினோம். ஆனால் விஜய் நடத்திய மாநாடு அப்படி இல்லை. சுமார் 3மணி நேரமோ 4 மணி நேரமோ மாநாடு நடந்தது. வெறும் கூச்சல், வெற்று சவடால்கள், விஜய மாநாடு என்றுதான் அது நடந்தது.
ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற வேட்கை இருக்கிறது. அதனால் திமுகவை விமர்சிக்கிறார்கள். முதல் மாநாட்டுக்கும் 2வது மாநாட்டுக்கு முன்னேற்றம் இருக்க வேண்டும். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்கக் கூடாது. நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று தெளிவு இருக்க வேண்டும் அல்லது நடப்பு அரசியல் குறித்து பேச வேண்டும். கொள்கை தலைவர்களான பெரியார் குறித்தோ அம்பேத்கர் குறித்தோ அவர்களது கருத்துகள் குறித்தோ எதுவும் பேசவில்லை. வெறும் திமுக வெறுப்பும் ஆட்சி அதிகாரம் மட்டுமே பேசப்பட்டுள்ளது. கருத்தியலாக அவர்களிடத்திலே ஒரு தெளிவு இல்லை எம்.ஜி.ஆர் காலம் வேறு, இப்போதைய காலம் வேறு என்று தொல் திருமாவளவன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





