தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. சீனியர் நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன், நடிகர் கார்த்தியின் அண்ணன், நடிகை ஜோதிகாவின் கணவன், 2 டி எண்டர்டெயின்மென்ட் திரைப்பட தயாரிப்பு நிறுவன தயாரிப்பாளர் என்ற பல அடையாளங்களை கொண்டவர்.
தமிழில் இதுவரை பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் சூர்யா. குறிப்பாக கஜினி, காக்க காக்க, நந்தா, பிதாமகன், சிங்கம், சிங்கம் 2, ஏழாம் அறிவு, வேல், அயன், சூரரைப் போற்று, ஜெய்பீம், வாரணம் ஆயிரம், 24, சில்லுனு ஒரு காதல், ஆதவன், பேரழகன், மாயாவி, பிரண்ட்ஸ், ஆறு என பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர்.
ஆனால் சூர்யா நடிப்பில் வெளியான குறிப்பிட்ட சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதிலும் குறிப்பாக காப்பான், அஞ்சான், எதற்கும் துணிந்தவன், என்ஜிகே, மாற்றான் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியது. எதற்கும் துணிந்தவன் படத்துக்கு பிறகு 2.5 ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் படமே வெளிவரவில்லை.
இந்த சூழலில் வருகிற 14ம் தேதி சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படம் திரைக்கு வருகிறது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று பேசி வருகிறார். அப்படி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது ஆசை குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருப்பது இப்போது வைரலாகி வருகிறது.
அந்த நேர்காணலில் பேசிய நடிகர் சூர்யா, என் மனைவி ஜோதிகாவுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற என் விருப்பம் கனவாகவே இருந்து வருகிறது. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். என்னையும் ஜோதிகாவையும் வைத்து படம் இயக்க வேண்டும் என்று எந்த இயக்குனரையும் நாங்கள் கேட்க விரும்பவில்லை. அது தானாகவே நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
நடிகர் சூர்யா, ஜோதிகாவுடன் காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், பேரழகன், மாயாவி, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். திருமணமாகி இத்தனை ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், மனைவி ஜோதிகாவுடன் மீண்டும் நடிக்க இப்பவுமா அந்த ஆசை இருக்கு, என்று சூர்யா ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.





