கடந்த 7 ஆண்டுகளாக விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் 2017, 2018, 2019ம் ஆண்டுகளில் நடந்த அளவுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் ஆ்ண்டுதோறும் குறைந்துக்கொண்டே வருகிறது. அதற்கு காரணம், டாஸ்க்குகளை குறைத்துவிட்டு, போட்டியாளர்களின் சண்டையை பிரதானமாக மாற்றியதுதான்.
அதுமட்டுமின்றி முதலில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போட்டியாளர்கள் பிக்பாஸ்க்கும், தொகுப்பாளர் கமலுக்கும் பெரிய அளவில் மரியாதை தந்தனர். அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்தனர். வீட்டில் உள்ள விதிமுறைகளை சரியாக பின்பற்றினர். அதனால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தது.
ஆனால் நாளடைவில் வீட்டுக்குள் வந்த போட்டியாளர்கள் ஒரு கட்டத்தில் பிக்பாஸையே கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். கமல்ஹாசன் குறித்தும் விமர்சித்து பேச ஆரம்பித்து விட்டனர். இதனால் பார்வையாளர்கள் மத்தியிலும் நிகழ்ச்சி மீது இருந்த அபிமானமும், பிடிப்பும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
மேலும் வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கிற பிக்பாஸ் நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கப் போவது இல்லை என்ற தகவலும் பார்வையாளர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. ஏனெனில் கமல் பிக்பாஸ் நிகழ்வில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார். இந்த முறை நடிகர் விஜய் சேதுபதிதான் பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்க உள்ளார்.
முதலில் பிக்பாஸ் போட்டியில் கலந்துக்கொள்ள பலரும் போட்டி போட்டனர். ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் தனிமனித விமர்சனங்கள் அதிகரிக்கும் விதமான போட்டிகளும், சண்டை சச்சரவுகளும் அதிகரித்து வருவதால், தன்னை பற்றிய மோசமான விமர்சனங்களுக்கு வாய்ப்பளிக்க விரும்பாமல், பலரும் இந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வந்தாலும் தவிர்த்து விடுகின்றனர். பிக்பாஸ் மூலம் கிடைக்கும் நெகடிவ் கண்ணோட்டத்தால் தனக்கு பப்ளிசிடி தேவையில்லை என்றும் முடிவு செய்கின்றனர்.
இந்நிலையில் வரும் பிக்பாஸ் சீசன் 8 போட்டியில் பங்கேற்க உள்ள 3 போட்டியாளர்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி விஜய் டிவியில் மிக பிரபலமாக ஓடிய பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்த அருண், வில்லி கேரக்டரில் நடித்த பரீனா ஆகியோர் பங்கேற்ற உள்ளனர். மேலும், பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் காதலி சோயாவும் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.





