கமல்ஹாசனுக்கு கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்த திரைப்படம் விக்ரம். 2022 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இதன்பிறகு, தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். இதில் அவர் ஷங்கருடன் இணைந்து பணியாற்றிய இந்தியன் 2 வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.
தெலுங்கு சினிமாவில் பிரபாஸ் அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடித்து பிரம்மாண்டமான முறையில் வெளியான கல்கி திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன். மிகக் குறுகிய காட்சிகளிலேயே அவர் வந்து போவார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தற்போது அவர் மணிரத்னத்துடன் கைகோர்த்து தக் லைப் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அவருடன் சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் அறிமுக வீடியோவே பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
அதில் தன்னை ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று அறிமுகம் செய்து கொள்வார் கமல்ஹாசன். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஊரை குறிப்பிடும் அவர் தன்னை ஒரு கேங்ஸ்டர் என்றும் அந்த வீடியோவில் தெரிவிப்பார். கூடவே சண்டைக் காட்சிகளும் பலமாக இருக்கும். இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது ரிலீசுக்கு தக் லைப் தயாராக இருக்கிறது.
ஏ ஆர் ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான ஜிங்குச்சா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து உள்ளது. படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக சிம்பு நடிப்பதாக சொல்லப்படுகிறது. தந்தைக்கு மகனுக்கும் இடையேயான மோதலை தான் இந்த திரைப்படம் விளக்குவதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் தக் லைப் திரைப்படத்தின் டிரைலர் வரும் 17ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மும்பை ஹைதராபாத் திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் படக்குழுவினர் பயணம் ஆகிறார்கள். இதன்பிறகு வரும் 24ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. சாய்ராம் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





