சில சர்ச்சைக்குரிய மனிதர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் கலாட்டா செய்து, பிரச்சனைகளை அவர்களே உருவாக்கி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது. இதனால் மற்றவர்களுக்கு தேவையற்ற துன்பங்களும், சிரமங்களும் ஏற்படும் என்று தெரிந்திருந்தும் இது போன்ற தவறுகளை தொடர்ந்து செய்வது அவர்களது மனநல பாதிப்பின் அறிகுறிதான் என்பது டாக்டர்களின் கருத்தாக உள்ளது.
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் மிக வேகமாக பைக் ஓட்டி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆனால் இப்போது சர்ச்சைக்கு பேர் போன டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து, ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் திருமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் மிக மிக அதிகமாக உள்ளது. 32 அறைகளிலும் பக்தர்கள் ஏழுமலையான் சுவாமியை தரிசிப்பதற்காக பல மணி நேரங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல யூடியூப்பர் டிடிஎஃப் வாசன், தனது நண்பர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை பிராங்க் வீடியோ எடுத்து இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த வீடியோவில் டிடிஎஃப் வாசன் மற்றும் அவருடைய ஒளிப்பதிவாளர் அஜீஸ் ஆகியோர், சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த அறையை திறப்பது போல், பாவ்லா செய்து ஏமாற்றி உள்ளனர்.
அதாவது மூடப்பட்ட கதவு அருகில் சில வினாடிகள் நிற்கின்றனர். அப்போது அங்கு அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கதவை திறக்க உள்ளனர் என்று ஆர்வமாக எழுந்து நிற்கும் வேளையில் சில வினாடிகள் அங்கே நின்று விட்டு அவர்கள் திரும்பி ஓடி வந்து விடுகின்றனர். அதாவது பக்தர்களிடம் மூடியிருந்த கதவை திறப்பது போல் பாவலா காட்டி ஏமாற்றி, அவர்களை எழுந்து நிற்க வைத்து விட்டு பிறகு ஓடி வருவது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இப்படி பக்தர்களை ஏமாற்றிய இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆக, திருப்பதி பஃன்னி வீடியோ என்று என்ற பெயரில் டிடிஎஃப் வாசன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் குறும்பு வீடியோ எடுப்பது மிகவும் தவறான செயல். அத்தகைய தவறான செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து டிடிஎஃப் வாசன் அவரது நண்பர்கள் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்க தேவையான நடவடிக்கைகளை தேவஸ்தான விஜிலென்ஸ் துறை செய்து வருகிறது. திருப்பதி கோவிலுக்கு சென்றும் டிடிஎஃப் வாசனுக்கு புத்தி வரலையே என்று அவரது வீடியோவை பார்த்த பலரும் திட்டுகின்றனர்.





