ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் கருப்பு. கடந்த மாதம் 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படம் ஒரு நாள் தாமதமாக 15ம் தேதி வெளியானது. இந்த படத்தில் சுவாசிகா ஷிவதா இந்திரன்ஸ் நட்டி நடராஜ் ஆர்ஜே பாலாஜி ஆடுகளம் நரேன் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கருப்பு படம் ரிலீஸாக இருந்த கடைசி நேரத்தில் பைனான்சியர் தந்த நெருக்கடியால் இந்த படம் திரைக்கு வருவதே கேள்விக்குறியாக மாறியது. படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கண்ணீர் விட்டு அழுது ஒரு வீடியோ வெளியிட்டார். ஆனால் படத்தின் நாயகன் சூர்யா இந்த படம் வெளியாக ரூ. 150 கோடி வரை கடன்களை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலை பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, எந்த ஒரு பெரிய பட்ஜெட் படமுமே திட்டமிட்டபடி எடுத்து முடிப்பது கிடையாது. உதாரணத்துக்கு கருப்பு திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வர வேண்டியது.
ஆனால் சுமார் 8 மாதங்கள் தள்ளி தாமதமாக இப்போதுதான் வெளியாகி உள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முந்தைய 2 நாட்கள் தயாரிப்பாளர்கள் பட்ட கஷ்டங்கள் எங்களுக்கு மட்டுமே தெரியும். படம் ரிலீஸ் ஆகும் போது சிக்கல் ஏற்பட்டால் எந்த ஒரு ஆர்டிஸ்ட்டோ தொழில்நுட்ப கலைஞரோ உதவிக்கு வருவதில்லை.
நடிகர் சூர்யாவை தவிர வேறு யாரும் அந்த பக்கமே வருவதில்லை. படம் சிக்கலில் இருக்கும்போது காரில் உட்கார்ந்து கொண்டு வீடியோவில் அழும் இயக்குனர் படம் ரிலீஸ் ஆகி நல்லபடியாக ஓடியவுடன் நான்தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டு, ஊர் ஊராக பெருமை பேச தொடங்கி விடுகிறார்கள் என்று திருப்பூர் சுப்ரமணியம் கோபமாக கூறியிருக்கிறார்.
கருப்பு படம் ரிலீஸ் சிக்கலான நேரத்தில் தனது சம்பளம் ரூ. 12 கோடியை தயாரிப்பாளர்களிடம் கறாராக பேசி வாங்கிய ஆர்ஜே பாலாஜி, படத்தின் அபார வெற்றிக்கு பின் ஊர் ஊராக சென்று தியேட்டர் விசிட் செய்தார். மேலும் நடிகர் சூர்யா படத்தின் இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டருக்கு கார்களை பரிசாக வழங்கிய நிலையில் ஆர்ஜே பாலாஜியை கண்டுகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





