ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியானது. தர்பார், அண்ணாத்த என தொடர் தோல்விகளை கொடுத்து வந்த ரஜினிகாந்திற்கு, இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. பீஸ்ட் படத்தால் துவண்டு கிடந்த இயக்குனர் நெல்சனும், இந்தப் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்து இருக்கிறார்.

ரஜினி மட்டுமின்றி முன்னணி நடிகர்களான சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருப்பதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் படம் வசூல் மழை குவித்து வருகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிவராஜ்குமார், மோகன்லால் வருவதை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி நடித்திருந்த சுருட்டு பிடிக்கும் காட்சியும், ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
ரஜினிக்கு உண்டான மாஸ் மொமெண்ட்களை படத்தில் வைத்த இயக்குனர் நெல்சன், நகைச்சுவை காட்சிகளுக்கும் சரியாக முக்கியத்துவம் அளித்திருக்கிறார். குறிப்பாக யோகி பாபு ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை பெரிதளவு கவர்ந்துள்ளது. இரண்டாம் பாதியில், கதை திசை மாறி பயணித்தாலும் அடுத்தடுத்து திருப்பங்கள் நிறைந்திருப்பதால் ஜெயிலருக்கு ரசிகர்கள் பாஸ் மார்க் போட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை ரிலீஸான இந்த திரைப்படம், தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இரண்டு நாட்களில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில், கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூலையும் ஜெயிலர் முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் 65 கோடி ரூபாய்க்கும் மேல் ஜெயிலர் படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள திரையரங்குகள் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், ரஜினியைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். இங்கு ரஜினிக்கு நிகர் ரஜினி மட்டும்தான்.
ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலரை பார்த்த உடனே, இந்தப் படம் மிகப்பெரிய ஓபனிங் கொடுக்கும் என்று நினைத்து விட்டேன். பாடல்களும் அதற்கு ஏற்றார் போல் ஹிட் அடித்ததால், படத்திற்கான ஓபனிங் சிறப்பாக இருந்தது. ஜெயிலர் திரைப்படத்திற்கு ரசிகர் ஷோ வேண்டாம் என்று தயாரிப்பு நிறுவனம் கூறிவிட்டது. இனிவரும் படங்களுக்கும் இதே நிலைதான் தொடரும் என்று நினைக்கிறேன். ஜெயிலர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், படம் 500 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கிறேன். இதை இப்போது கூற முடியாது. 10, 15 நாட்களுக்கு பிறகு தயாரிப்பு நிறுவனமே இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்” என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.





