தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என எல்லா மொழி படங்களிலும் கதைக்கு தான் பஞ்சம் இருக்கிறது. ஆனால், நடிகர் ராம் சரண் விஷயம் அதுவல்ல. நல்ல கதைகள் கிடைக்காமல் பழைய படங்களின் இருந்து கதை கருக்களை, காட்சிகளை உருவி எடுத்து, நமது தமிழ் இயக்குநர்கள் கோடி, கோடியாக பணத்தை குவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
உதாரணமாக சமீபத்தில் வெளியாகி, 540 கோடி ரூபாய் வசூலித்த விஜய் நடித்த லியோ படம், ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் என்ற ஆங்கில படத்தின் தழுவல்தான். படத்தில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட அந்த சாக்லேட் காபி சண்டை காட்சி அப்பட்டமான காப்பி என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதே போல் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைப் என்ற படமும் ஹாலிவுட் படத்தில் இருந்து அப்பட்டமான ஈயடிச்சான் காப்பி படம்தான். தி ரைஸ் ஆப் ஸ்கை வாக்கர் என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து உருவி எடுக்கப்பட்டதுதான். தி தக்கி என்ற புத்தகமும் இதில் ரெபரன்ஸ் ஆக இருக்கிறது.
இப்படி சினிமாக்களை காப்பியடித்து காப்பியடித்து படங்கள் இயக்குவதும், அதில் நடிகர்கள் நடிப்பதும் ரசிகர்களை முட்டாளாக்கி ஏமாற்றுகிற மிக மோசமாக, அறுவருக்கத்தக்க ஒரு செயலாகவே இருக்கிறது. ஒரு இயக்குநர், நடிகர் என்பவர்கள் புத்திசாலிகளாக இல்லாமல் ஏமாற்று பேர்வழிகளாக மாறிவிடுவது சினிமாவின் சாபமாக மாறி வருகிறது.
இப்படி சினிமாவில் கதைக்கு பஞ்சம், படங்களுக்கு டைட்டில் வைப்பதில் பஞ்சம் என பிரச்னை நீடிக்கிறது. தமிழில் பல படங்களுக்கு கதாநாயகன் பெயரே படத்தின் பெயராக இருக்கிறது. குறிப்பாக ரஜினி, விஜய் படங்களில் இதை அதிகமாக பார்க்க முடியும். அந்த வகையில், தெலுங்கு சினிமாவில் நடிகர்களுக்கு வைக்கப்படும் பட்ட பெயர்களுக்கு பஞ்சம் நிலவுகிறது.
தெலுங்கு ஹீரோ நடிகர் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாவதாக இருந்து, இப்போது தள்ளி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் என குறிப்பிட்டுள்ளது. ராம்சரணின் தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவியிடம் இருந்து மெகா வையும், அவரது தம்பி, அதாவது சித்தப்பா பவர் ஸ்டார் பவன் கல்யாண் பட்டத்தில் இருந்து பவர் என்ற பட்டத்தையும் கடன் வாங்கி மெகா பவர் ஸ்டார் ஆகி இருக்கிறார் ராம்சரண். இப்படி எல்லாம் பட்டம் வைப்பது அவசியம்தானா என்கின்றனர் ரசிகர்கள்.





