இன்று நடிகர் விஜய் மகன் இயக்குனர் ஜேசன் சஞ்சய் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவர் இப்போது லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வரும் ஒரு புதிய படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தை இயக்கும் அவருக்கு சம்பளம் ரூ. 10 கோடி என்று சொல்லப்படுகிறது. அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். தமிழ் நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்தான். ஜனநாயகன் படத்தில் நடிக்க அவரது சம்பளம் ரூ. 250 கோடி என்று சொல்லப்படுகிறது. சீனியர் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் கூட இன்னும் 150 கோடி ரூபாய் சம்பளத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அவரது வளர்ச்சிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் அவரது அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் தான். அவர்தான் விஜயை வைத்து சில படங்களை ஆரம்பத்தில் டைரக்ட் செய்தார். முன்னணி நடிகரான விஜயகாந்தை தனது மகனுடன் நடிக்க வைத்தார். ஒரு காலகட்டம் வரை விஜய் நடிக்கும் படங்களின் கதைகளை கேட்டு ஓகே சொன்னவரே அவரது அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்தான்.
ஆனால் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் மற்ற வாரிசுகளை போல இல்லாமல் இயக்குனராகி விட்டார். விரைவில் அவரது இயக்கத்தில் படம் வெளியாகவும் உள்ளது. ஆனால் இதுவரை நடிகர் விஜய் தனது மகனின் படம் துவக்க விழா பூஜையிலோ, படப்பிடிப்பு தளத்துக்கோ வந்தது இல்லை. தனது மகன் குறித்து எந்த இடத்திலும் அவர் பேசியதும் இல்லை.
அதே போல் தனது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் விஜய் எதுவும் ஸ்பெஷல் என்ட்ரி கொடுப்பாரா, கேமியோ ரோலில் எதுவும் வருவாரா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்படி எதுவும் இதுவரை இல்லை என்பதும் தெளிவாகி விட்டது. லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் இயக்குனர் ஜேசன் சஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், விஜய் தரப்பில் இருந்து ஒரு பிறந்த நாள் வாழ்த்துகள் கூட இதுவரை இல்லை.
தனது மகனை அரசியல் மேடை ஏற்றினால் வாரிசு அரசியல் என்று மற்றவர்கள் விமர்சிக்கலாம் என்று தவெக தலைவர் விஜய் கருதினால் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் தனது சினிமா வாரிசாக இயக்குனராக களத்தில் இருக்கும் தனது மகன் ஜேசன் சஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை பொதுவெளியில் தெரிவிப்பது, அவரது பட விழாவில் பங்கேற்பது அவரது படத்தில் ஒரு காட்சியில் நடிப்பது போன்ற விஷயங்களை மறுப்பதுதான் தளபதி ரசிகர்களுக்கே புரியாத புதிராக உள்ளது.





