தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குனராக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர் சமுத்திரக்கனி. சில படங்களை அவரே தயாரித்தும் இருக்கிறார். சமூக அக்கறை கொண்ட கேரக்டர்களில் தொடர்ந்து சமுத்திரக்கனி நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பிற மொழிகளிலும் சமுத்திரக்கனி நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன.
பாய்ஸ் படம் மூலம் இயக்குனர் ஷங்கரால் அறிமுகம் செய்யப்பட்டவர் பரத். தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடித்த காதல் படம் பெரிய வரவெற்பை பெற்றது. எம்டன் மகன் முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு நேபாளி சேவல் கூடல் நகர் உள்ளிட்ட பல படங்களில் பரத் நடித்திருக்கிறார். ஸ்பைடர் படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமுத்திரக்கனியும், பரத்தும் இணைந்து நடித்துள்ள படம் வீரவணக்கம். மலையாள பட இயக்குனர் அனில் வி நாகேந்திரன் இயக்கத்தில் உருவான முதல் தமிழ் படம் வீரவணக்கம். சமூக உணர்வுகளை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.
வீரவணக்கம் படத்தில் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி மற்றும் நடிகர் பரத் முதன்முறையாக இணைந்து முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. போஸ்ட் புரடக்சன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.
சமகால சமூகத்தில் நடைபெறும் அவலங்கள், குற்றங்களை குறைகளை சொல்லும் ஒரு படமாக வீரவணக்கம் படம் உருவாகியுள்ளது. மாற்றத்தை தேடி போராடும் சாதாரண மனிதர்களின் குரல்கள் மற்றும் கடந்த கால புரட்சி நிகழ்வுகள் ஆகியவற்றை மையப்படுத்தி வீரவணக்கம் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். சமூக நோக்கத்துடன் உருவாக்கிய வீரவணக்கம் படம் வருகிற 26ம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பெரிய வரவேற்பை பெறாத நடிகர் பரத்துக்கு, வீரவணக்கம் படம் ஒரு கம்பேக் படமாக அமையும் என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.





