- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 98வது பிறந்த நாள்… கலையுலக சக்ரவர்த்தியை மறக்காத...

இன்று நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 98வது பிறந்த நாள்… கலையுலக சக்ரவர்த்தியை மறக்காத ரசிக கண்மணிகள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிவாஜி கணேசன். மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான செவாலியே தாதே சாகிப் பால்கே விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரர். விருதுகளால் இவருக்கு பெருமையல்ல, விருதுகளுக்கே இவரால் பெருமை என்று சொல்லும் அளவுக்கு நடிப்புலகில் சக்ரவர்த்தியாக வாழ்ந்து காட்டியவர்.

விழுப்புரத்தைச் சேர்ந்த சின்னையா மன்றாயர் – ராஜாமணி தம்பதிக்கு 4வது மகனாக பிறந்தவர் கணேசன். கடந்த 1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி அவர் பிறந்தார். அவரது பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். ராஜாமணி அம்மாவின் பூர்வீகம் விழுப்புரம். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் ரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மேலும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். அவர் ஒரு போரா்டடத்தில் கலந்துக்கொண்டு கைது செய்யப்பட்டு சிறை சென்ற அதே நாளில் தான் கணேசன் பிறந்தார். சிறுவயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை பார்க்க தனது தந்தையுடன் சென்ற கணேசன் தானும் நடிகனாக வேண்டும், கட்டபொம்மனாக நடிக்க வேண்டும் என்று ஆழமான எண்ணம் கொண்டார்.

நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக திருச்சியில் முகாமிட்டு இருந்த மதுரை ஸ்ரீ பாலகான சபை என்ற நாடக குழுவில் 7 வயதில் அவர் சேர்ந்தார். அந்த நாடக குழுவில் இருந்த சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் தான் கணேசனுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தார். 7 வயது சிறுவனான கணேசன் முதலில் நடித்த மேடை நாடகம் இராமாயணம். அதில் அவர் பெண் வேடமிட்டு சீதை கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து பரதன் சூர்ப்பனகை இந்திரஜித் என பல நாடகங்களில் கணேசன் நடித்தார். சிறுவனாக நாடகங்களில் நடித்த போதே மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலை பெற்றார்.

திராவிடர் கழக மாநாட்டில் 1946ம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசு சிவாஜியாக கணேசன் நடித்தார். அதுவரை கணேசன் என அழைக்கப்பட்ட அவரது நடிப்புத் திறனை பாராட்டி தந்தை பெரியார் அவரை சிவாஜி கணேசன் என்று அழைத்தார். அதன்பிறகு தான் கணேசன் சிவாஜி கணேசன் ஆனார். பராசக்தி படத்தில் நடித்த போது சிவாஜி கணேசனுக்கு திருமணமானது. தனது உறவுக்கார பெண் கமலாவை 1952ம் ஆண்டு மே 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சுவாமி மலையில் இவர்கள் திருமணம் நடந்தது.

சிவாஜி – கமலா தம்பதிக்கு ராம்குமார் பிரபு என 2 மகன்களும் சாந்தி தேன்மொழி என 2 மகள்களும் உள்ளனர் சிவாஜி கணேசன் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் கொண்டவர். எனவே தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் அன்னை இல்லத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார். சினிமாவில் நடிப்பில் பல சாதனைகளை படைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது 72வது வயதில் 2001ம் ஆண்டில் ஜூலை 21ம் தேதி மறைந்தார். இன்று அவரது 98வது பிறந்த நாளில் அவரது புகைப்படத்துக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வருகின்றனர்.

சற்று முன்