நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என்ற இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் அவர் பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது அவர் தமிழக முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு எம்எல்ஏ பதவியில் மட்டுமே அவர் இருக்க முடியும் என்கிற விதிமுறையின்படி முதல்வராக பதவியேற்ற உடன் கடந்த மே 10ம் தேதி விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இப்போது அந்த தொகுதி காலியாக இருப்பதாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.
நேற்று திருச்சியில் தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் தவெக சார்பில் உங்கள் வீட்டிலிருந்து ஒருவர்தான் நிற்கப் போகிறார் என்றும் அவர் உறுதியாக பேசியிருந்தார். இதற்கிடையே தற்போது சமூக வலைதளங்களில் திருச்சி கிழக்கு தொகுதியில் நடக்க போகும் இடைத்தேர்தலில் தவெக சார்பில் நடிகர் மற்றும் இயக்குனர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து இப்போது முன்னணி நட்சத்திர நடிகராக தயாரிப்பாளராக இயக்குனராக வலம் வரும் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். நடிகராக மட்டுமில்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உதவும் ஒரு மிகச் சிறந்த சமூக சேவகராகவும் உள்ளார். மேலும் மாற்றம் என்ற சேவை அறக்கட்டளை மூலம் பல விதமான உதவிகளை மக்களுக்கு செய்து வருபவர்.
அதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிச்சயமாக அவர் வெற்றி வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் நின்று ஜெயித்து சட்டசபைக்கு வர வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அவருக்கு போட்டியாக மாஸ்டர் ராகவா லாரன்ஸ் போன்ற ஒரு பிரபலமான நட்சத்திர நடிகரை களத்தில் இறங்க தவெக தலைவர் தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆளுங்கட்சி தவெக சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் வெற்றிக்கனி பறிப்பதும் மிக முக்கியமாகிறது.





