தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த 13ம் தேதி முதல் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணங்களை மாவட்டம் வாரியாக மேற்கொண்டு வருகிறார். திருச்சி அரியலூர் நாகை திருவாரூர் மாவட்டங்களை தொடர்ந்து 3வது வாரமாக இன்று நாமக்கல்லில் அவர் மக்களை சந்தித்து பேசினார். அப்போது கிட்னி திருட்டு குறித்து நடிகர் விஜய் ஆவேசமாக கருத்துகளை கூறினார்.
இன்று மதியம் நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, லாரி பாடி கட்டும் தொழிலில் இருந்து போக்குவரத்து வாகனங்கள் சார்ந்த பல தொழில்கள் செய்யும் ஊர் நாமக்கல். முட்டையின் உலகமே நாமக்கல் தான். சத்தான முட்டை கொடுக்கும் ஊர் மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரியை எழுதியவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்க அடிகளார். அண்ணன் கேப்டன் விஜயகாந்துக்கு மட்டுமல்ல, நமக்கும் உணர்ச்சியூட்டும் இந்த வரிகளை தந்திருக்கிறார். நாமக்கல் கவிஞர் பிறந்த மண் இது. பட்டியலின பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுத்த முன்னாள் முதல்வர் சுப்பராயன் பிறந்த மண் நாமக்கல்.
தமிழக மக்களுக்கு உணர்ச்சியும் புரட்சியையும் கொடுத்த ஊர் இந்த நாமக்கல். இங்கு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்தது. கொப்பரை தேங்காய் அரசே கொள்முதல் செய்து அதிலிருந்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்யும் என்றும் வாக்குறுதி கொடுத்தது.
நாட்டுச்சக்கரை வெல்லம் ரேஷனில் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்தது. ஆசிரியர்கள் மட்டுமல்ல போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் திமுக வாக்குறுதி கொடுத்தது. தேர்தல் வாக்குறுதிகளாக திமுக இத்தனையும் சொன்னார்களே? செய்தார்களா? நாமக்கல்லில் முட்டை சேமிப்பு கிடங்கு, பாக்டீரியா வைராலஜிக்கல் மையம் அமைக்கும் கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. ஆண்ட கட்சிகள் ஆளும் கட்சிகள் அந்த கோரிக்கைகளை இதுவரை கண்டு கொள்ளவே இல்லை.
நாமக்கல்லில் நடந்த கிட்னி திருட்டு நாடறிந்ததுதான். அதுவும் கிட்னி திருட்டில் விசைத்தறிக்கூடங்களில் பணிபுரியும் ஏழைப் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் விசைத்தறியாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த இந்த அரசு எதுவும் செய்யாதது தான். வறுமையால் அவர்கள் கந்துவட்டி கொடுமையால் சிக்கிக் கொள்ள அதன் தொடர்ச்சியாக கிட்னி திருட்டிலும் சிக்கியுள்ளனர். கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி தவெக ஆட்சி அமைத்தவுடன் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று நடிகர் விஜய் ஆவேசமாக பேசினார்.





