தமிழகத்தில் அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய் இப்போது தனது தவெக கட்சியில் 2வது மாநில மாநாடு வருகிற 25ம் தேதி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இந்த நாள் நடிகர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் என்பதும் அவர் பிறந்த ஊரான மதுரையில் இந்த 2வது மாநாடு நடப்பதும் பெரிய அளவில் ஒரு உற்சாகத்தை தவெக வினர் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கழகத் தோழர்களுக்கு வணக்கம். மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறு கொண்டு வெற்றி நடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்.
இந்த பயணத்தின் அடுத்த கட்டமாக கழகத்தின் மாநில மாநாடு ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன். ஆனால் மாநாடு முடிந்த ஒரு நாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
எனவே தவெக மாநாட்டுக்கான முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக ஆகஸ்ட் 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை இதில் ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல்துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில் கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் ஏற்கனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கான பணிகள் ஏற்கனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்த பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கழகத் தோழர்கள் வரும் 21ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் நடிகர் விஜய் கூறி இருக்கிறார்.
வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் என்பதால் அந்த நாளில் மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டு இருந்த நடிகர் விஜய்க்கு முட்டுக்கட்டை போட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை காரணமாக காட்டி ஆளுங் கட்சி தரப்பில் இப்படி ஒரு உள்ளடி வேலையை பார்த்து விட்டதாக தவெக கட்சியினர், தொண்டர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.





