வழக்கமாக ஒவ்வொரு தமிழக சட்டசபை தேர்தலிலும் அதிமுக – திமுக தான் நேரடியாக போட்டி களத்தில் இருக்கும். ஆனால் இப்போது காட்சி வேறு மாதிரி மாறி இருக்கிறது. இந்த முறை நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் திமுக, அதிமுக என 2 திராவிட கட்சிகளுக்கும் பெரிய தொல்லையாக மாறியிருக்கிறது. தேர்தல் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுமோ என்ற அச்சத்தை தந்திருக்கிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களத்தில் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கி விட்டது. திமுகவுக்கு எதிராக ஒருபுறம் அதிமுகவும் ஒரு புறம் தவெகவும் மல்லுக்கட்டத் தயாராகி வருகிறது. நடிகர் விஜய்க்கு ஆதரவாக மக்கள் செல்வாக்கு ஆளுங்கட்சி திமுவுக்கு கலக்கத்தை தந்திருக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவுக்கும் இது நெருக்கடியை தந்திருப்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மை.
இந்த சூழலில் நடிகர் விஜய் போலவே உடை அணிவது, அவரை போலவே கட்சி மேடையில் செல்பி வீடியோ எடுப்பது, கட்சியினர் வீசும் கட்சி துண்டை எடுத்து கழுத்தில் போட்டுக் கொள்வது என திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அலப்பரை செய்து வருகின்றனர். என்னய்யா இப்படி எங்க தலைவரை காப்பியடிக்கறீங்க என்று தவெக கட்சி நிர்வாகிகள் மேடைகளில் கிண்டல் செய்தும் வருகின்றனர்.
இதற்கிடையே தவெக கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு தலைவர் விஜய் வரும்போதும், கட்சி பொதுக்கூட்டங்களில் அவர் பேசுவதற்கு சில நிமிடங்கள் முன்பாகவும் உங்க விஜய் உங்க விஜய் உயிரென வரேன் நான் என்ற பிரசார பாடல் ஒலிப்பது ஆரம்பத்தில் இருந்தே நடக்கிறது. விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டில் துவங்கி, நேற்று வேலூரில் நடந்த கூட்டம் வரை இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இந்த பாடல் தவெக கட்சியினர் மத்தியில் பெரிய அளவில் டிரண்டிங் ஆன நிலையில் இந்த பாடல் கூட்டத்தில் ஒலித்தாலே தவெக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாகமாகி விடுகின்றனர். ஏனெனில் அந்த பாடலை நடிகர் விஜயே தனது சொந்தக் குரலில் பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போல் திமுக தேர்தல் பிரசார கூட்டங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் தொண்டர்கள் ஒரு வைப் ஏற்படுத்தும் துள்ளலான ஒரு பாடலை விஷூவல் காட்சிகளுடன் உருவாக்க உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
அதற்காக அவரது நெருங்கிய திரையுலக நண்பர் இயக்குனர் மாரி செல்வராஜிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்தவர். அடுத்து இன்பன் உதயநிதி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தையும் மாரி செல்வராஜ் தான் டைரக்ட் செய்கிறார். அதனால் அனல் பறக்கும் திமுக பிரசார பாடலை உருவாக்கும் முயற்சியில் மாரி செல்வராஜ் இருந்து வருகிறார். இப்படி ஒரு பாடல் உருவாவதை இதிலும் காப்பியா என்று தவெக கட்சியினர் கலாய்த்து வருகின்றனர்.





