திமுகவின் அரசியல் வாரிசாக இப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் உதயநிதி ஸ்டாலினை மையப்படுத்தி தான் திமுகவின் தேர்தல் களம் இருக்கும் என்பதால், விஜய்க்கும் அவருக்கும் தான் நேரடி போட்டி என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
அரசியலுக்கு வரும் முன்பே சினிமாவில் பல படங்களில் நடித்தவர் உதயநிதி. கடைசியாக அவர் நடித்தது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படம்தான். அதற்கு முன்பு பல படங்களில் சந்தானமும் உதயநிதியும் ஒரு கல் ஒரு கண்ணாடி நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி, பொதுவான எம்மனசு தங்கம் உள்ளிட்ட படங்களில் உதயநிதி நடித்திருந்தார். ரெட் ஜெயின்ட் மூவிஸ் என்ற பெயரில் சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனமும் உதயநிதி நடத்தி வருகிறார். பெரும்பாலான படங்களை இவரது தயாரிப்பு நிறுவனம்தான் வெளியீடு செய்து வருகிறது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் கமல் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, சினிமா குறித்த கமல் அவர்களின் அறிவு என்பது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். சினிமா மட்டுமின்றி எல்லா விஷயங்களிலும் அவரது அறிவு ஆச்சரியமாக இருக்கும். எப்படி ஒரு மனிதரால் இப்படி எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள முடிகிறது என்று எனக்கு வியப்பாக தோன்றும்.
ஷூட்டிங் பார்க்க போனால், ஷூட்டிங்கை பார்க்கிறேனோ இல்லையோ, அவரை பார்ப்பதற்காக, அவர் என்ன செய்கிறார் என்பதை பார்ப்பதற்காக ஷூட்டிங்குக்கு போவேன். அவர் பண்ற விஷயங்களை உட்கார்ந்து பார்த்து ரசிச்சிக்கிட்டு இருப்பேன். அந்த கேரக்டரை எப்படி ஹேண்டில் பண்றார், எப்படி சக நடிகர்களோட பழகுகிறார் என்றுதான் கவனித்து பார்ப்பேன்.
என்னிடம் அவர் மிகவும் பாசமாக இருக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு என்னிடம் அவர் அன்பு காட்டுகிறார். ஒரு உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் இருவரும் இதுவரை அரசியல் பேசியதே இல்லை. சினிமா மட்டுமே எங்களது பேசுபொருளாக இருக்கும் என்று கமல் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.





