நடிகர் அஜீத்குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் துணிவு படம் கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. அதன்பிறகு அந்த ஆண்டில் ஏகே படம் எதுவும் வெளியாகவில்லை. 2024ம் ஆண்டிலும் ஏகே படம் எதுவும் வரவில்லை. ஆனால் இந்த 2 ஆண்டுகளில் விடாமுயற்சி குட்பேட் அக்லி என 2 படங்களில் அஜீத்குமார் நடித்தார்.
துணிவு படத்துக்கு பிறகு 2 ஆண்டுகளாக படம் இல்லாத நிலையில் 2025ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் விடாமுயற்சி படமும் அடுத்து ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி படமும் வெளியானது. ஆனால் இதில் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி மாஸ் ஹிட் ஆனது.
இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் இந்த ஆண்டில் துவக்கத்தில் இருந்தே வெளிநாடுகளில் 10 மாதங்களுக்கு நடக்கும் கார் ரேஸில் பங்கேற்க ஆர்வம் காட்டினார். துபாய் பிரிட்டன் இத்தாலி நெதர்லாந்து என தொடர்ந்து வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் அவர் பங்கேற்று வருகிறார். இதில் அவரது அஜீத்குமார் ரேஸிங் அணி அடிக்கடி வெற்றி பெறும் தகவல்களும் வருகின்றன.
இந்த சூழலில் அடுத்து நடிகர் அஜீத்குமார் நடிக்கப் போகும் 64வது படத்தை இயக்கப் போவது, குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்தான் என்பது உறுதியாகி விட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அல்ல. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் என்று லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் நடிக்க வருகிற நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை 4 மாதங்கள் மட்டுமே அஜீத்குமார் கால்ஷீட் தந்திருக்கிறார். ஏனெனில் வருகிற அக்டோபர் மாதம் இறுதி வரை கார் ரேஸில் அஜீத்குமார் பங்கேற்ற பிறகுதான் நவம்பரில் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். பிப்ரவரி மாத இறுதி வரை இந்த படத்தில் நடிக்கும் அவர் 2026 மார்ச் மாதத்தில் மீண்டும் கார் ரேஸில் கலந்துக்கொள்ள போய் விடுவார்.
அதனால் நவம்பர் துவங்கி பிப்ரவரி மாதத்துக்குள் 4 மாதங்களில் அஜீத்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஆதிக் ரவிச்சந்திரன் முடித்துவிட்டு, பிறகு அடுத்த 2 மாதங்களுக்குள் மற்ற நடிகர் நடிகைகளின் காட்சிகளை எடுத்து அந்த படத்தில் இணைத்துவிட வேண்டும். வாய்ப்பிருந்தால் இந்த படம் வருகிற 2026ம் ஆண்டு மே 1ம் தேதி அஜீத்குமார் பிறந்த நாளில் ரிலீஸ் ஆகும். படம் ரெடியாகாத பட்சத்தில் ஜூன் மாதம் ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.





