தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தனது முதல் திரைப்படம் ஆன பொல்லாதவனில் தான் யார் என்பதை நிரூபித்தார் வெற்றிமாறன். பைக் திருட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அந்த சமயம் எந்த ஓர் எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி சக்கை போடு போட்டது.
பிறகு சேவல் சண்டையை மையமாக வைத்து அவர் எடுத்த ஆடுகளம் திரைப்படம் பட்டையை கிளப்பியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தனுஷ் தேசிய விருதை பெற்றார். படத்தில் அத்தனை விஷயங்களும் சரியாக இருக்க, வெற்றிமாறன் வளர்ந்து கொண்டே இருந்தார்.
விசாரணை, வடசென்னை, அசுரன் என வெற்றிமாறன் கை வைத்த அத்தனை திரைப்படங்களும் வெற்றி மாலை சூடின. இதில் அசுரன் திரைப்படம் மீண்டும் தேசிய விருதை பெற்றது. இதனை கலைப்புலி தாணுதான் தயாரித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவரது தயாரிப்பில், வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தது.
சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்னும் சிறு நாவலை மையப்படுத்தியே இதன் கதையை எழுதி இருந்தார் வெற்றிமாறன். படத்தில் சூர்யா நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கான டெஸ்ட் சூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடத்தப்பட்டது. அதில் காளையுடன் சூர்யா மோதுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. படத்தில் வி எப் எக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் அடிக்கடி வெற்றிமாறன் அமெரிக்கா பறந்து வந்தார்.
ஆனால் திடீரென சூர்யா தான் ஒப்புக்கொண்ட திரைப்படங்களின் பணிகளுக்கு சென்று விட்டதால், வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் தள்ளிப் போயின. வெற்றிமாறனும் விடுதலை மற்றும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து விட்டார். இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த ஜோடி இணைவதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் தனது 46வது திரைப்படத்தை வெங்கி அட்லூரியிடம் சூர்யா கொடுத்திருக்கிறார்.
இப்படியான சூழலில்தான் வாடிவாசல் திரைப்படத்திற்கான அப்டேட்டை வழங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. அதாவது படக்குழுவினர் அனைவரும் மதுரையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் இதன் சூட்டிங் தொடங்கும் என்றும் கூறியிருக்கிறார். வெற்றிமாறனின் சூட்டிங் பிளானில் நான் தலையிட மாட்டேன் என்றும், அசுரன் திரைப்படத்தைப் போன்று இதை செய்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





