ராஜ்கிரண், மீனா நடித்த என் ஆச ராசாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. தொடர்ந்து, சின்னகவுண்டர் படத்தில், விஜயகாந்துக்கு குடை பிடிக்கும் விவசாய தொழிலாளியாக மாகாளி கேரக்டரில் நடித்திருப்பார். தொடர்ந்து தேவர் மகன், சிங்கார வேலன், எல்லாமே என் ராசாதான் என பல படங்கள், வடிவேலுவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தன.
காதலன் படத்தில், பிரபுதேவாவுக்கு நண்பனாக நடித்து அசத்தியிருப்பார். பேட்டராப் பாடலில், பிரபுதேவாவுக்கு இணையாக நடனமாடி கலக்கி இருப்பார். இப்படி, தன் திறமையான நடிப்பாற்றலால், முன்னுக்கு வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் மிகப்பெரிய காமெடி நடிகராக விஸ்வரூபம் எடுத்தார். தனக்கென ஒரு காமெடி குரூப்பை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் அதகளம் செய்தார்.
ஒரு கட்டத்தில், ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார். இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன், எலி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நடித்தார். இதில் இரண்டு படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் வரேவற்பை பெற்றது.
ஒரு கட்டத்துக்கு பிறகு, தமிழ் சினிமாவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட வடிவேலு, சமீபத்தில் மாமன்னன் படத்தில் நடித்ததற்காக பேசப்பட்டார். சந்திரமுகி 2 படத்தில், அவரது காமெடி நடிப்பு எடுபடவில்லை. இதற்கிடையே அவருடன் நடித்த பலரும், அவரை பற்றி பல குறைகளை, புகார்களை கூறி வருகின்றனர்.
இப்போது அந்த வரிசையில், நடிகர் பெஞ்சமின் தன் வாழ்க்கையை கெடுத்தவர் என வடிவேலு மீது புகார் கூறியிருக்கிறார். வெற்றிக்கொடி கட்டு படத்தில், துபாயில் இருந்ததற்காக பெருமைப்பட்ட வடிவேலுவை கண்டபடி திட்டுவாரே, அவர்தான் நடிகர் பெஞ்சமின். ஐயா படத்தில், குரங்குடன் படம் பார்க்க வடிவேலு தியேட்டருக்கு படம் பார்க்க வருபவரும் இவர்தான்.
பெஞ்சமின் கூறுகையில், திருப்பாச்சி படத்தில் விஜய் உடன் நடித்த போது, எனக்கு பெரிய பெயர் கிடைத்தது. பல தயாரிப்பாளர்கள் என் படத்தில் நடிக்க வேண்டும் என, அட்வான்ஸ் கொடுத்தனர். ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் என் கையில் அட்வான்ஸ் பணமே இருந்தது. ஆனால், ஓராண்டாகியும் யாருமே என்னை நடிக்க அழைக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது, வடிேவலு தான் தயாரிப்பாளர்கள் பெயரில் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து, மற்ற படங்களில் நடித்து நான் வளர்ந்துவிடாமல் தடுக்க, வீட்டிலேயே என்னை முடக்கியது தெரிந்தது. பின், ஓராண்டுக்கு பின் நடிக்க போனபோது யாருமே எனக்கு வாய்ப்பு தரவில்லை என்று கூறியது, இப்போது வைரலாகி வருகிறது.





