தமிழ் சினிமாவில் வெற்றி பெறவும், முன்னுக்கு வரவும் திறமை, உழைப்பு, அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் போதாது. அந்த நேரத்தில், சூழலில் யாராவது உதவ வேண்டும். திரையில் தோன்ற, படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க யாராவது உதவ வேண்டும். அந்த உதவிதான், திரையில் முகம் காட்டவும், ரசிகர்களிடம் சென்ற சேரவும் வாய்ப்பளிக்கிறது.
அப்படி சின்னக்கவுண்டர் படம் மூலம் வடிவேலுவை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தவர் விஜயகாந்த் தான். பிறவி நடிகன்டா அவன் என, விஜயகாந்த் பலபேரிடம் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். கேப்டன் என்கிறார்களே, எந்த கப்பலுக்கு இவர் கேப்டன், இந்த கேப்டன் ஓட்டற கப்பல், தண்ணீல தள்ளாடும் என விஜயகாந்தை மிக கடுமையாக பேசி கேவலப்படுத்தியவர் வடிவேலு.
ஆனால் ஏந்த இடத்திலும், வடிவேலு குறித்து அவமதித்து ஒரு வார்த்தை கூட பேசாதவர் விஜயகாந்த். அவர் நினைத்திருந்தால் வடிவேலுவுக்கு யாரும் படங்களில் நடிக்க வாய்ப்பளிக்காதீர்கள் என்று தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்க முடியும். ஆனால் எப்போதும் அதை செய்ததில்லை. இதற்கு காரணம், சக கலைஞனாக, நடிகனாக வடிவேலுவை விஜயகாந்த் நினைத்தார், அதனால்தான் அவர் பேசியதை எல்லாம் அலட்சியப்படுத்தினார்.
இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு, விஜயகாந்த் செய்த அந்த காரியத்தை யாரும் மறந்திருக்க முடியாது. போண்டாமணி உடல்நலக்குறைவால் இறந்து போனார். அவரது குடும்பம் ஆதரவின்றி தவிக்கிறது. நிறைய கடன்களும் இருக்கிறது. 12 லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்து அந்த குடும்பத்துக்கு உதவி இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.
அப்படிப்பட்ட ஒரு சிறந்த மனிதர், உயர்ந்த பண்பாளர் இறந்து, அவரது உடல் தேமுதிக அலுவலகத்திலும், அடுத்து சென்னை தீவுத்திடலிலும் வைக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் மூத்த நடிகர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தனக்கு சின்னக்கவுண்டர் படத்தில் வாய்ப்பளித்தவர் என்ற எண்ணமும், நன்றி உணர்வும் இல்லாமல் வடிவேலு, இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை.
ஏற்கனவே வடிவேலுவுக்கு சினிமாவில் போதிய வாய்ப்புகள் இல்லை. 10 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்துவிட்டு இப்போதுதான் ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகிறார். இனி அந்த வாய்ப்புகளும் இருக்காது. உண்மையான சினிமா ரசிகர்கள் வடிவேலுவின் இந்த நன்றி மறந்த செயலை, மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இனி, வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் அஸ்தமன காலம்தான் என்றும் கூறப்படுகிறது.





