தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இயக்குனராக உள்ள அவர், இதுவரை 15 படங்களை இயக்கி உள்ளார். இதில் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான கமல் நடித்த இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடித்த தெலுங்கு படம் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.
கடந்த 2010ம் ஆண்டில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஏஆர் ரகுமான் இசையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் எந்திரன். இந்த படம் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய கதையை திருடி உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த கதை திருட்டு விவகாரத்தில் இயக்குனர் ஷங்கர் சிக்கிய நிலையில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி பிஎம்எல்ஏ விதிகளின்படி இயக்குனர் ஷங்கரின் ரூ. 10.11 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த இயக்குனர் ஷங்கர், எந்திரன் படம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்த நிலையில் என் மீது கதை திருட்டு குற்றச்சாட்டு எழுப்பிய ஆரூர் தமிழ்நாடன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆனால் நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் புகார் அடிப்படையில் என்னுடைய சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்துகிறது. அதனால் அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து நான் மேல்முறையீடு செய்வேன் என்று ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் கூறியிருந்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் வழக்கு மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனிநபர் புகார் வழக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இதுகுறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 21ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.





