லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். பீஸ்ட்டும், வாரிசும் அடி வாங்கியதால் இந்தப் படத்தை நிச்சயமாக ஹிட் படமாகத்தான் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லோகேஷ் படத்தை இயக்கியிருப்பதால் படம் மெகா ப்ளாக் பஸ்டர் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் தளபதி ரசிகர்கள்.
லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். இது விஜய்யின் 68ஆவது படமாகும். ஏஜிஎஸ் நிறுவனம் 25ஆவது படமாக இதனை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வெங்கட் பிரபு கடைசியாக இயக்கிய கஸ்டடி படம் ப்ளாப் ஆனது. எனவே விஜய்யை வைத்து கம்பேக் கொடுப்பதற்கு வெங்கட் முடிவு செய்திருக்கிறார். அதனையொட்டி தனது டீமுடன் கதையை வார்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்தப் படமானது அரசியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் ட்ரெய்லரை பார்க்கும்போதுதான் அனைத்து விஷயங்களுமே தெரியவரும். படத்தின் பூஜை விரைவில் போடப்படவிருக்கிறது.ஷூட்டிங்கையும் விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜோதிகா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தெரிகிறது.
இந்நிலையில் வெங்கட் பிரபு அடியே என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதில் ஜிவி பிரகாஷ் ஹீரோ.இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு பேசுகையில், “அடியே படத்தில் நான் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஒன்று விஞ்ஞானி. இன்னொன்று உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக கௌதம் மேனனாக நடித்திருக்கிறேன். இரண்டுமே சிரமமான கதாபாத்திரங்கள்.
அடியே படத்தில் நான் விஜய் படத்தை இயக்கிவிட்டதாக கதையில் வரும். அந்த விளம்பரம் வெளியான பிறகுதான் எனக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் தயாரிப்பாளரை சந்தித்தபோது தெய்வீக உணர்வுதான் ஏற்பட்டது. விக்னேஷ் கார்த்திக் என்னிடம் கதை சொல்லும்போதே எனக்கு ரொம்பே பிடித்திருந்தது. அதேபோல் வித்தியாசமாகவும் இருந்தது. கௌதம் மேனனுக்கு நான் அவரைப் போல் நடித்திருக்கிறேன் என்று இப்போதுவரை தெரியாது. அவர் கோபித்துக்கொள்ளமாட்டார் என்று நம்புகிறேன்” என்றார்.





