நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கத்தில் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ள படம் வேட்டையன். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் கேமியோ ரோலில் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். மஞ்சுவாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி, ராணா டகுபதி, பகத் பாசில், கிஷோர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இருந்து மனசிலாயோ என்ற பாடல் பர்ஸ்ட் சிங்கிளாகவும், வாண்டர் ஹண்டர் என்ற பாடல் செகன்ட் சிங்கிளாகவும் வெளியானது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 20ம் தேதி நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் மிக சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் பேசிய ரஜினி, டோபியின் கழுதை கதை சொல்லி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆவதால், அந்த நாளில் வெளியாவதாக இருந்த கங்குவா படம், நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், ரஜினி என்ற சீனியர் நடிகருக்காக, தமிழ் சினிமாவின் அடையாளத்துக்காக இந்த விஷயத்தை செய்வதாக சூர்யா கூறியிருந்தார்.
இந்நிலையில் வேட்டையன் படத்தை தயாரித்துள்ள லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்த படத்தை, வேறு சில முக்கிய விநியோகஸ்தர்கள் பெரிய அட்வான்ஸ் கொடுத்து படத்தை வாங்கி தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் வெளியீடு செய்வதாக இருந்தது. ஆனால் வழக்கமாக லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு படங்களை ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம்தான் வெளியிடுவது வழக்கமாக இருந்தது.
ஆனால் அவர்கள் ப்ரி ரிலீஸ் முறையில் படத்தை வெளியிட்டு அதில் வரும் கணிசமான லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் தங்களது கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதி லாபத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்கி விடுவர். ஆனால் இந்த முறை ப்ரி ரீலீஸ்க்கு லைகா நிறுவனம் சம்மதிக்காத நிலை இருந்தது. எனினும் இது எங்களுக்கு கௌரவ பிரச்னை. இந்த முறையும் லைகா தயாரிப்பு வேட்டையன் படத்தை நாங்கள்தான் வெளியிடுவோம் என ரெட் ஜெயின்ட் நிறுவனம் லைகாவை சம்மதிக்க வைத்த நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது.





