தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி இன்று ஹீரோவாக இயக்குனராக வலம் வருபவர் ஆர்ஜே பாலாஜி. ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக நான் ஸ்டாப்பாக பேசி ரசிகர்களின் மனம் கவர்ந்த அவர் பிறகு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையாளராகவும் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
சினிமாவில் பல படங்களில் காமெடி ரோலில் நடித்த ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படம் மூலம் ஹீரோவாக மாறினார். தொடர்ந்து மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் சொர்க்கவாசல் சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அவர் இயக்கிய கருப்பு படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.
இப்போது ஆர்ஜே பாலாஜி மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார். கருப்பு படம் மாஸ் ஹிட் கொடுத்தாலும் அடுத்து அவருக்கு படம் இயக்க வாய்ப்பு அமையவில்லை. அதனால் அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆயத்தமாகி வருகிறார். விரைவில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு படத்தின் 2ம் பாகம் படத்தை நடிகர் சூர்யா தனது 50வது படமாக திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அது பரிசீலனையில் தான் உள்ளது. ஏனென்றால் கருப்பு படத்தை பொருத்த வரை படம் முழுக்க வந்தவர் சூர்யா அல்ல, ஆர்ஜே பாலாஜி தான். அதனால் கருப்பு படத்தை 2ம் பாகமாக எடுத்தாலும் படத்தை ஆர்ஜே பாலாஜியே ஆக்கிரமித்துக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் ஜே பாலாஜி ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, சின்ன வயதில் அடிக்கடி வீடு மாறினோம். ஒருமுறை அப்படி வீடு மாதிரி ஒரு புதிய ஏரியாவுக்கு சென்றபோது எனக்கு சில நண்பர்கள் பழக்கமானார்கள். அவர்கள் என்னை விட 10 வயது பெரியவர்கள். ஒருமுறை குடிக்க கூப்பிட்டார்கள். முயற்சி செய்து பார்த்ததில் அது திரில்லாக இருந்தது.
குடித்துவிட்டு மூன்று நான்கு பைக்குகளில் ட்ரிபிள்ஸ் போனோம். திடீரென அவர்கள் முகத்தில் கர்சீப் எடுத்துக் கட்டிக்கொண்டு சற்று இருட்டான பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார்கள். 15 வயது சிறுவனாக என்னால் அந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியவில்லை என்று நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி அப்போது கூறியிருக்கிறார்.





