தமிழ் சினிமாவில் எழுதப்படாத சில சென்டிமென்ட் இருக்கிறது. ஒருமுறை அந்த சென்டிமென்டில் சிக்கி விட்டால் பிறகு அதில் இருந்து வெளியேறுவது கடினமாகி விடும். உதாரணமாக ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் பெற்ற ஒரு நடிகை அடுத்த படத்தில் பிரபல ஹீரோவுக்கு தங்கையாக நடித்து அந்த படம் ஹிட் ஆகி விட்டால், பிறகு தங்கை வேடத்துக்கு தான் அந்த நாயகியை அழைப்பார்கள்.
இப்படி பல நல்ல நடிகைகள் தங்கையாக, அக்காவாக, அண்ணியாக, கவர்ச்சி நடிகையாக, நகைச்சுவை நடிகையாக நடித்து, அவர்களது வளமான எதிர்காலத்தையே இழந்தது உண்டு. நடிகர் முத்துராமன் சிறந்த நடிகராக இருந்தும் அவர் நடித்தது எல்லாமே இரட்டை ஹீரோ படம்தான். அதனால் அவரது தனித்தன்மையே வெளிப்படவில்லை.
அதுபோல் நடிகை மும்தாஜ் நல்ல நடிகையாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் கவர்ச்சியாக நடிகையாக மாறிப்போனார். ஜெயம், அந்நியன் படங்களில் நடித்த சதாவும் அப்படிதான் கடைசியில் பயன்படுத்தப்பட்டார். அதுபோல் அப்பாஸ், ஸ்ரீகாந்த் என சில நடிகர்களும் தங்களது தனித்துவ அடையாளத்தை இழந்தவர்களாக மாறினர்.
எனவே, வாய்ப்பில்லாத நேரத்தில் ஏதேனும் ஒரு கேரக்டரில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நடிக்கலாம் என்று ஒரு நடிகையோ, நடிகரோ முன்வந்தால் நாளடைவில் அவர்கள், அதற்கானவர்கள் என்ற முத்திரை குத்தி, அதையே சென்டிமென்ட் ஆகி திரைத்துறையில் அவர்கள் பயணிக்க வேண்டிய பாதையை மாற்றி விடுவது காலம் காலமாக நடந்து வருகிறது.
ஆதித்ய வர்மா, மகான் ஆகிய படங்களில் நடித்துள்ள துருவ் விக்ரம், நடிகர் சியான் விக்ரமின் மகன். சேது விக்ரமை பார்ப்பது போன்ற தோற்றத்தில் மிக இளமையான நாயகனாக காணப்படுகிறார். இவரது நடிப்பில் ஆதித்ய வர்மா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க துருவ் விக்ரம் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் நாகசைதன்யாவும், துருவ் விக்ரமும் இரட்டை நாயகர்களாக நடிக்க உள்ளனர். இந்த படத்தில் நடிக்க பெரிய சம்பளம் பேசப்பட்டு இருப்பதால், இரட்டை நாயகர்களில் ஒருவராக நடிக்க துருவ் விக்ரம் ஒத்துக்கொண்டு இருக்கலாம் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் இப்படி இரட்டை நாயகர்களில் ஒருவராக தொடர்ந்து நடித்தால் அவரது தனித்தன்மை இழக்கும் வாய்ப்புள்ளது. அது அவரது சினிமா எதிர்காலத்தை பாதிக்கலாம்.





