கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியை ரஜினிக்கு தந்த படம் ஜெயிலர். இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தசெ ஞானவேல் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள படம் வேட்டையன். இந்த படத்தில் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப்பச்சன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். ராணா டகுபதி, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இன்று மாலை சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் படத்தின் இயக்குனர் தசெ ஞானவேல், நடிகர் ரஜினிகாந்த் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் படக்குழுவினர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த முறை ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடந்தபோது, நடிகர் ரஜினிகாந்த் கழுகு – காக்கா கதை பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் சொன்ன கதையில் குறிப்பிட்டு சொன்னது நடிகர் விஜயை தான் என்று பலத்த மோதல் ஏற்பட்டது. ஏனெனில் அப்போது விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்ற விவாதம் பரபரப்பாக போய்க்கொண்டு இருந்தது.
ரஜினி சொன்ன காக்கா கழுகு கதையால் ரஜினி, விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதற்கு பதிலடி தரும் விதமாக நடிகர் விஜய் ஒரு விழாவில் பேசுகையில், காட்டுக்குள் சென்ற 2 வேட்டைக்காரர்களில் ஒருவர் முயலை குறி வைத்து அடித்தார். ஒருவர் யானையை குறி வைத்து தோற்றார். ஆனால் யானையை அவர் குறி வைத்ததே வெற்றிதான் என்று பேசினார். யானை என்று ரஜினியை குறிப்பிடுகிறார் என்று சர்ச்சை கிளம்பியது.
அதன்பின் லால் சலாம் விழாவில் பேசிய ரஜினிகாந்த், விஜய்க்கு நானும் போட்டியில்லை, எனக்கு அவரும் போட்டியில்லை. அப்படி நினைத்தால் இருவருக்கே அது மரியாதை, கெளரவம் இல்லை என்று பேசி, விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். லியோ பட விழாவில் பேசிய நடிகர் விஜயும், சூப்பர் ஸ்டார் என்றால் நடிகர் ரஜினிகாந்த் ஒருவர் மட்டும்தான் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் இப்போது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் வெளியாகி 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை நெருங்கி வருகிறது. அதனால் வசூல் சக்கரவர்த்தி நடிகர் விஜய் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று மீண்டும் பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளனர்.இன்று மாலை நடக்கும் வேட்டையன் படம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய் குறித்து ஏதேனும் பேசுவாரா, விஜய் அரசியலுக்கு வந்துள்ள சப்ஜெக்ட் குறித்து அவரது கருத்துகளை தெரிவிப்பாரா, மறைமுகமாக குட்டிக்கதை சொல்வாரா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.





