கடந்த 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று ஜனவரி 14ம் தேதி அஜீத்குமார் நடிப்பில் வெளியான படம் துணிவு. இயக்குனர் எச் வினோத் இயக்கிய இந்த படத்தில் மஞ்சு வாரியார் நடித்திருந்தார். வங்கி கொள்ளையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
அஜீத்குமார் நடிப்பில் துணிவு படம் வெளியான அதே நாளில்தான் விஜய் நடித்த வாரிசு படமும் வெளியானது. விமர்சன ரீதியாக டிவி சீரியல் என விமர்சிக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. எனினும் வாரிசு படத்துக்கு பிறகு லியோ படமும், தி கோட் படமும் விஜய் நடிப்பில் வெளியாகி விட்டது.
ஆனால் 2 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் இன்னும் அஜீத்குமார் நடித்த ஒரு படம் கூட வெளியாகவில்லை. விடாமுயற்சி, குட்பேட் அக்லி என்ற 2 படங்களில் அஜீத்குமார் நடித்துவரும் நிலையில் ஒரு படம் கூட திரைக்கு இன்னும் வரவில்லை. விடாமுயற்சி படத்தின் டீசர் கூட இன்னும் வெளிவராதது ரசிகர்களை பலத்த ஏமாற்றமடைய செய்துள்ளது.
குட்பேட் அக்லி படம் வருகிற 2025ம் ஆண்டில் மே 1ம் தேதியன்று அஜீத் பிறந்த நாளில் திரைக்கு வரும் என்று உறுதியாக கூறப்படும் நிலையில் விடாமுயற்சி அதற்கு முன்னதாக வந்துவிடுமா என்பதில் பெருத்த குழப்பமும், சந்தேகமும் நீடிக்கிறது. ஏனெனில் இன்னும் ஒரு பாடல் காட்சி அதில் பாக்கி உள்ளது.
இந்த மாதமே முதல் வாரத்தில் அஜீத்குமார், திரிஷா பங்கேற்கும் அந்த பாடல் காட்சி ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்படும் என்று கூறிய நிலையில், அதை டிசம்பர் மாதத்துக்கு அஜீத்குமார் தள்ளி வைத்துள்ளார். ஜனவரி மாதம் கார் ரேஸில் பங்கேற்க இருப்பதால், டிசம்பர் இறுதிக்குள் குட்பேட் அக்லி ஷூட்டிங்கை முடித்துவிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
குட்பேட் அக்லி படத்தில் தாடியுடன் உள்ள கெட்டப்பில் அஜீத்குமார் நடித்து வருகிறார். ஆனால் விடாமுயற்சி பாடல் காட்சியில் இளமைகால அஜீத்குமாராக கிளீன் ஷேவ் கெட்டப்பில் அவர் நடிக்க வேண்டும். அதனால் குட்பேட் அக்லி ஷூட்டிங் முடியும் வரை அஜீத் தாடியுடன்தான் இருப்பார். அதனால் கார் ரேஸ் முடிந்த பிறகுதான் விடாமுயற்சி ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தாடிக்காக இப்படி மாதக்கணக்கில் ஷூட்டிங்கை தள்ளி போட்டு தாமதிக்கிறார்களே என ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.





