தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் இருந்தாலும், அவர்களில் குறிப்பிட்ட சில இயக்குனர்களை தான் ரசிகர்கள் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்தப் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பவர் வெற்றிமாறன். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னை மெருகேற்றிக் கொள்ளும் அவர், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்தார் வெற்றிமாறன்.
அப்போது அது ஒரு கனாக்காலம் படத்தை பாலு மகேந்திரா எடுக்க அதில் நாயகனாக தனுஷ் நடித்திருந்தார். அப்போதே தனுஷிடம் தனது பொல்லாதவன் திரைப்படத்திற்கான கதையை கூறி நடிக்க சம்மதம் வாங்கினார் வெற்றிமாறன். இதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படம் உருவாக, யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அது சமயத்தில் தொடர் தோல்வியை கொடுத்துக் கொண்டிருந்த தனுஷ் இருக்கும் பொல்லாதவன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இதன்பிறகு, வெற்றிமாறன் தொட்ட திரைப்படங்கள் எல்லாம் துலங்கின. மீண்டும் தனுசை வைத்து ஆடுகளம் எனும் வெற்றி திரைப்படத்தை கொடுத்து தேசிய விருதை வாங்கினார் வெற்றிமாறன். பிறகு விசாரணை, வடசென்னை, அசுரன் என அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை வெற்றிமாறன் கொடுத்தார். இதில் அசுரன் திரைப்படத்திற்காக மீண்டும் தேசிய விருதை வெற்றிமாறன் பெற்றார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க தயாராகினார் வெற்றிமாறன். இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்திற்கான டெஸ்ட் சூட்டிங்கிலும் சூர்யா இடம்பெற்றார். இப்படியான சூழலில், அடுத்தடுத்த படங்களில் சூர்யா கமிட்டாகி இருந்ததால் வாடிவாசல் படத்தில் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
இந்த சமயத்தில், சூரி விஜய் சேதுபதியை வைத்து விடுதலை படத்தை இயக்க முடிவு செய்தார் வெற்றிமாறன். குறைந்த நாட்களிலேயே சிறிய பட்ஜெட்டில் இந்த படத்தை எடுப்பதாகதான் வெற்றி மாறன் முடிவு செய்தார். ஆனால் படத்திற்கான தேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க, அதற்கான வேலைப்பாடுகளும் அதிகரிக்க தொடங்கின. இதனால் இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டு முதல் பாகத்தை அவர் முடித்து ரிலீஸ் செய்தார். வெற்றிமாறன் எதிர்பார்த்தது போலவே விடுதலை படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இப்படியான சூழலில் இரண்டாம் பாகத்தை தற்போது அவர் எடுத்து வருகிறார். சிறுமலை வனப்பகுதியில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்டர்டாம் நாட்டில் வரும் 31 ஆம் தேதி நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் திரையிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தின் சூட்டிங் இன்னும் முடிவு பெறாத சூழலில், தற்போது வரை எடுத்துள்ள காட்சிகள் மற்றும் முதல் பாகத்தில் உடன் தொடர்புடைய காட்சிகளை திரையிட வெற்றிமாறன் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.





