ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிறகு ஹீரோவாக உயர்ந்து இன்று தமிழ் சினிமாவில் ஆலமரமாக விரிந்து இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்திலும் அவர் மிரட்டி இருக்கிறார். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் இங்கு ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறார் விஜய் சேதுபதி.
பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்த அவர் அந்த அளவு ஜொலிக்கவில்லை. அதேசமயம் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார். தொடர்ந்து பாலிவுட் வரைக்கும் சென்று ஷாருக்கான்க்கு வில்லனாக நடித்தார். ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டதாக ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறி இருந்தார் விஜய் சேதுபதி.
தொடர்ந்து ஹீரோ கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் அவருக்கு இந்த ஆண்டு மட்டுமே ஏஸ் மற்றும் தலைவன் தலைவி என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இதில் ஏஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தலைவன் தலைவி திரைப்படமும் இதே ரகத்தில் இருந்தாலும், குடும்ப ஆடியன்ஸ்களை பெற்றதால் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.
இதனைத் தொடர்ந்து தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் அவர் நடித்து வருகிறார். இதன் நடுவே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9வது சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் ஃபேமஸான அந்த நிகழ்ச்சி இந்தி சின்னத்திரை உலகிற்கு பயணித்து, பிறகு தமிழ்நாட்டிற்கும் வந்தது.
இதன் ஏழு சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதற்காக அவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் திரைப்படங்களில் நடிப்பது மற்றும் கட்சிப் பணிகள் காரணமாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து எட்டாவது சீசனை தொகுத்து வழங்கினார் விஜய் சேதுபதி. அப்போது அவருக்கு ஊதியமாக 60 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று சொன்னார்கள்.
இந்த சூழலில், விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9வது சீசனும் தொடங்க இருக்கிறது. இதையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை அவருக்கு, 75 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





