தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி. கருப்பு வெள்ளை படங்கள் துவங்கி, வண்ணத்திரை படங்கள் வரை ஒரு தனி சாம்ராஜ்ஜியமே நடத்திக் காட்டியவர்கள்தான் மக்கள் திலகமும், நடிகர் திலகமும். சினிமாவில் மட்டுமே, தமிழக அரசியலிலும் தனது ராஜ்ஜியத்தை தொடர்ந்தவர் எம்ஜிஆர்.
அடுத்து வந்த ரஜினி, கமல் இருவரும் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி இடங்களை பிடித்தனர். வித்யாசமான நடிப்பிலும், கலையிலும் சிறந்து விளங்கிய கமல், மற்றொரு சிவாஜியாக தன்னை சினிமாவில் நிலை நிறுத்தினார். அடுத்து, மக்கள் செல்வாக்கில் இன்னொரு எம்ஜிஆராக சினிமாவில் நிலைத்துக் கொண்டார் ரஜினிகாந்த்.
இப்போது இருவருமே தமிழ் சினிமாவின் ஜாம்பவன்களாக இருக்கின்றனர். என்றாலும் முதுமை காரணமாக இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் வரைதான் அவர்கள் நடிப்புத் துறையில் தொடர வாய்ப்புள்ளது. அந்த இடத்தில் மீண்டும் தொடரும் ஜாம்பவான்களாக விஜய், அஜீத்குமார் உருவாகி வந்தனர். ரஜினி, கமலுக்கு அடுத்தப்படியாக விஜய், அஜீத்குமார் தான் அந்த இடங்களில் ரசிகர்களால் கருதப்பட்டனர்.
ஆனால் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. இனி ஒரு படம் நடித்துவிட்டு நடிப்பை விட்டு விலகி விடுகிறேன் என விஜய் தெளிவாக அறிவித்து விட்டார். ஏற்கனவே படங்களில் ஏனோதானோ என்று விருப்பமே இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கும் அஜீத்குமாரும், சில ஆண்டுகளில் துபாயில் செட்டிலாகி விடுவார் என்று ஏற்கனவே தகவல் பரவி வருகிறது. அவர் இன்னும் வெளிநாடுகளில் பைக் டூர் போவதில்தான் ஆர்வமாக இருந்து வருகிறார்.
இப்படி விஜய் ஒருபுறம் அரசியல், அஜீத் ஒருபுறம் டூர் என கிளம்புகையில் அவர்கள் இதுவரை இருந்த இடங்கள் காலியாகிறது. இது அவர்களின் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை, அதிர்ச்சியை தந்திருக்கிறது. இனி அவர்களது இடத்தை பிடித்த சூர்யா, தனுஷ் போன்றவர்கள் மத்தியில் கடுமையான போட்டி ஏற்படலாம்.
அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜீத் இருவரும் பணம் காய்க்கும் மரங்களை போல, அவர்கள் நடிக்கும் படங்களால் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கணிசமான லாபம் அடைந்தனர். அவர்கள் படங்கள் அடுத்தடுத்த வந்ததால், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைத்தது. இனியும் அதுவும் வாய்ப்பில்லை என்பது பெரிய ஏமாற்றத்தை, அதிருப்தியை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.





