சினிமாவை பொருத்த வரை திறமை இருப்பவர்கள் எப்படியும் ஜெயித்து விடுகிறார்கள். அதனுடன் உழைப்பும் விடாமுயற்சியும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் சினிமாவில் அவர்களால் தொடர்ந்து பல வெற்றிகளை பெற முடிகிறது. ஒரு கட்டத்தில் சாதனையாளராகவும் மாறி விடுகின்றனர். ஆனால் சினிமாவில் சாதிக்க முதலில் அவசியம் தேவை என்பது வாய்ப்பு தான்.
எந்த துறையாக இருந்தாலும் அதில் ஒருவர் தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அமைய வேண்டும். அத்தகைய வாய்ப்பு இல்லாமல்தான் எத்தனையோ திறமைசாலிகள் இன்னும் வெளிச்சத்துக்கு வர முடியாமல் புகழ் அடைய முடியாமல் முடங்கிப் போய் ஒரு மூலையில் கிடக்கின்றனர். அதனால் வாய்ப்பே வெற்றிக்கான முதல் படியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் விஜய் ஆண்டனி. டிஸ்யூம் என்ற படத்துக்கு இசையமைத்தார். பிறகு வேட்டைக்காரன் நான் அவன் இல்லை காதலில் விழுந்தேன் என பல படங்களுக்கு இசையமைத்தார். பிறகு நான் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானார். முதல் படத்திலேயே பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து பிச்சைக்காரன் திமிரு புடிச்சன் இந்தியா பாகிஸ்தான் கொலைகாரன் எமன் அண்ணாதுரை என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து முன்னணி நட்சத்திர நடிகராக மாறினார். இப்போது விஜய் ஆண்டனி திரைப்பட நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் முக்கிய கலைஞராக உள்ளார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, என் கேரியரிலேயே மிகப்பெரிய படம் என்றால் அது வேட்டைக்காரன் படம்தான். அந்த படத்தோட வாய்ப்பு எனக்கு இயக்குனர் மூலமாகவோ தயாரிப்பாளர் மூலமாகவோ கிடைக்கவில்லை. அது விஜய் மூலமாக தான் கிடைத்தது. விஜய் தான் விஜய் ஆண்டனி நல்லா பண்றார். அவருக்கு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்லி இருக்கார்.
அதுவும் அந்த படத்துக்கு நான் அப்போது வாங்கின சம்பளத்தை விட 4 மடங்கு அதிகமாக சம்பளம் கொடுத்தாங்க. அந்த படத்தோட எல்லா பாடல்களிலும் அவ்வளவு ஈடுபாட்டோட விஜய் இருந்தார். இன்னும் சொல்லப் போனால் ஒரு சின்ன தாமரை பாடலுக்கு சுச்சியை பாட வைக்கலாம் என்று சொன்னது விஜய் தான் என்று நடிகர் விஜய் ஆண்டனி அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





