நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு போஸ்ட் புரடக்சன் பணிகளைத் தொடர்ந்து, ஜூன் 13ம் தேதி படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்கு பிறகு விஜய் நடிப்பாரா, மாட்டாரா என்ற பலத்த குழப்பம் நீடிக்கிறது. ஏனெனில் இதுவரை அவரது அடுத்த படம் விஜய் 69 குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. வழக்கமாக ஒரு படத்தில் பாதி படப்பிடிப்பை கடந்துவிட்டாலே, விஜய் அடுத்த படத்துக்கு தயாராகி விடுவார்.
ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கிய தயாரிப்பு நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர், தனித்தனியாக விஜயை அணுகி தங்களது தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் நடிக்க அழைப்பு விடுத்ததாகவும், அதில் ஐசரி கணேஷூக்கு விஜய் ஓகே சொல்லும் பட்சத்தில் அந்த படத்தை இயக்கப் போவது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்தான் என்ற தகவலும் பரவியது.
ஆனால் இவை இரண்டுமே செவிவழி செய்திகளாக இருக்கிறதே தவிர, ஆதாரபூர்வமானதாக இல்லை. தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பிலோ, விஜய் தரப்பிலோ நேரடியாக இன்னும் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால் இவற்றை முழுமையான தகவலாக ஏற்க முடியாது.
இந்த சூழலில் இன்று, நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து நேரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க தலைவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பணிகள், பூத் கமிட்டி அமைப்பது, தேர்தலில் போட்டி மற்றும் பிற கட்சிகளுக்கு ஆதரவு தருவது உள்ளிட்டவை குறித்து மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், அவர்களது கருத்துகளை கேட்டுக்கொண்டுள்ளார். இனி அடுத்தகட்டமாக மாவட்டம் வாரியாக, தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தவும் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.





