நடிகர் அஜீத்குமார், விஜய் இருவரும்தான் இப்போது தமிழ் சினிமாவில் எதிரும் புதிருமாக களத்தில் நிற்கும் போட்டியாளர்கள். இப்போது நடித்து வரும் கோட் படம், இதையடுத்து ஒரு படம் என 2 படங்களில் தன் சினிமா பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக ஏற்கனவே விஜய் அறிவித்துள்ளார். 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி என்பது மட்டும்தான் அவரது இலக்கு.
நடிகர் விஜயை பொருத்தவரை 67 படங்களில் நடித்து முடித்துவிட்டார். கோட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அஜீத்குமார் இதுவரை 62 படங்களில் நடித்துள்ளார். அதிலும் கடைசி படமான விடாமுயற்சி பாதியில் நிற்கிறது. அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க உள்ளார். இது அஜீத்குமாரின் 63வது படமாக இருக்கிறது. சமீபத்தில் தலையில் ஆபரேசன் நடந்துள்ளதால், 3 மாதங்கள் வரை ஷூட்டிங்கில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் என 25 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்த்திருந்த அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இதோ வர்றேன், அதோ வர்றேன், ஆண்டவன் சொன்னால் வர்றேன், அடுத்த வீட்டுக்காரன் சொன்னால் வர்றேன் என்று பம்மாத்து காட்டியே தன் படங்களை ஓட வைத்துவிட்டார் ரஜினி என்றுதான் சொல்ல வேண்டும். கடைசி வரை ரசிகர்களை வைத்து, தன் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார் ரஜினி.
ஆனால் கமல்ஹாசன், ரசிகர்களை நம்பி இல்லாமல் மக்களை நம்பி களத்தில் இறங்கினார். ஏனெனில் கமல்ஹாசன் தன் நடிப்பை, திறமையை, உழைப்பை நம்பும் ஒரு சிறந்த கலைஞனாக இருந்ததால் மிகப்பெரிய வெற்றிகளையும் பெற்றார். மிக மோசமான தோல்விகளையும் அடைந்தார். ஒரு கலைஞனாக ரசிகர் மனங்களில் இடம்பிடித்த கமல், அரசியல்வாதியாக நெருங்க கூட முடியவில்லை.
இந்த சூழலில் ரஜினிகாந்த் ரசிகர்களை ஏமாற்றினாலும், கமல்ஹாசன் மீது மக்களுக்கு ஏமாற்றம் காரணமாகவும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி இருக்கிறார். இது விஜய்க்கு மட்டுமின்றி விஜய் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை தந்திருக்கிறது. ஏனெனில் இனி தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், கட்சி நிர்வாகிகளாக மாறியிருக்கின்றனர்.
மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் என கட்சியின் முக்கிய பொறுப்புகளை பெற உள்ளதால், மிகுந்த சந்தோஷத்தில் கெத்தாக, அஜீத்குமார் ரசிகர்கள் மத்தியில் வலம் வருகின்றனர். ஆனால் 25 ஆண்டுகளுக்கு மேலாக அஜீத் ரசிகர்களாக உள்ளவர்கள், ரசிகர் மன்றமும் இல்லாமல் நிர்வாக பொறுப்புகளும் இல்லாமல், இப்படி வெறும் ரசிகர் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோமே, விடாமுயற்சியும் பாதியில் நின்றது, குட் பேட் அக்லி படமும் துவங்கவில்லை என்று பலத்த ஏமாற்றத்துடன் நொந்து நூடூல்ஸ் ஆகி இருக்கின்றனர்.





