நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இதற்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டது. இதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்றிருந்த புஸ்ஸி ஆனந்த், கட்சி குறித்து பதிய விண்ணப்பித்தார். இதைத் தொடர்ந்து தனது முதல் அறிக்கையையும் விஜய் வெளியிட்டார்.
அதில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மக்கள் நலப் பணிகள் செய்யப்பட்டாலும், பொருளாதாரம் சமூகம் தொடர்பான வேலைபாடுகளுக்கு அரசியல் கட்சி தேவைப்படுவதாகவும், இதனால் தமிqழக வெற்றி கழகம் என்னும் கட்சியை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். அரசியல் தனக்கு பொழுதுபோக்கல்ல புனிதமான பணி என்றும் விஜய் குறிப்பிட்டிருந்தார்.
அரசியலின் உயரம் மட்டுமல்ல நீள அகலத்தையும் எமது முன்னோர் வழி நின்று பார்த்து மனதளவில் பக்குவப்பட்டு கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவளிக்க போகவில்லை என்று தெரிவித்த விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற உழைக்க இருப்பதாக தெரிவித்தார். அடுத்த திரைப்படத்துடன் முழுமையாக அரசியல் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அதேசமயம் அவர் மீது சர்ச்சையும் இழந்தது. எதற்காக தமிழ்நாடு வெற்றி கழகம் என பெயர் வைக்காமல் தமிழகம் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார் என்று பலர் கேள்வி எழுப்பினர். இதே போல் தன்னை ஜோசப் விஜய் என்று கூறிக்கொள்ளும் அவர், எதற்காக அறிக்கையில் விஜய் என்று மட்டுமே கூறியிருக்கிறார் என்றும் சிலர் கூறியிருந்தனர்.
மேலும் அறிக்கையில் அவ்வளவு எழுத்துப் பிழைகள் இருப்பதாகவும் சில சுட்டிக்காட்டினர். இது ஒரு பக்கம் இருக்க, படத்தில் நடித்துக் கொண்டே தனது கட்சி வேலைகளை தீவிர படுத்தியிருக்கிறார் நடிகர் விஜய். நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி மூலம் பங்கேற்ற விஜய், நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தீவிரமாக உழைக்க அறிவுறுத்திய அவர், குக் கிராமங்களுக்கும் கட்சியை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
இப்படியான சூழலில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், விஜய் போட்டியிடும் தொகுதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி அவர் நாகை அல்லது தூத்துக்குடியில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் முதல் கூட்டத்தை, தூத்துக்குடி அல்லது திருநெல்வேலியில் நடத்த விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி நகர் பகுதியில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் சூழலில், அவர் அந்த ஊரை போட்டியிடும் தொகுதியாக தேர்ந்தெடுக்க போவது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.





