தமிழ் சினிமாவில் நடிகை பிரியாமணிக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஸ்பெஷல் வரவேற்பு இருந்து வருகிறது. ஏனென்றால் பருத்திவீரன் படத்தில் முத்தழகு கேரக்டரில் அவர் வெளிப்படுத்திய அழுத்தமான நடிப்பு, ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத ஒரு சிறந்த நடிப்பாக இருந்தது. அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது.
நடிகை பிரியாமணி தொடர்ந்து மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், அது ஒரு கனாக்காலம், சாருலதா, ஆறுமுகம் உள்ளிட்ட தமிழில் பல படங்களில் நடித்த நிலையில், இப்போது தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியிலும் பிஸியாக நடிக்கும் ஒரு நடிகையாக மாறி இருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் பிரியாமணி நடித்திருந்தார். தமிழில் கண்களால் கைது செய் என்ற படத்தில் பாரதிராஜா இயக்கத்தில் பிரியாமணி அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது நடிகர் விஜய் நடிக்கும் 69 வது படத்திலும் பிரியாமணி நடிக்கிறார் என்று படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை பிரியாமணி கூறியதாவது, நான் ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டதால், நான் மதம் மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து கூறி வருகிறார்கள். ஆனால் நான் மதம் மாற மாட்டேன் என்று திருமணத்திற்கு முன்பே என் கணவரிடம் தெளிவாக கூறிவிட்டேன்.
அதனால் இப்போது வரை அவரவர் மத நம்பிக்கையை மதித்து பின்பற்றி வாழ்ந்து வருகிறோம். அதோடு நான் முஸ்லிமை திருமணம் செய்திருப்பதால் எங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பயங்கரவாதிகளாகத்தான் இருப்பார்கள் என்று சிலர் கருத்து கூறுகிறார்கள். இது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.
காதலித்து ஜாதி மதத்தை கடந்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் எங்களை பற்றி தயவு செய்து வெறுப்பு செய்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை பிரியாமணி. சினிமாவில் மதம் மாறி திருமணம் செய்து வாழும் காதலர்களை பாராட்டும் அதே சூழலில், உண்மையில் ஜாதி மதம் கடந்து திருமணம் செய்து காதலுடன் வாழும் தம்பதி குறித்து வெறுப்பு செய்திகளை தருவதற்கு, பிரியாமணி ரசிகர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.





