நடிகர் விஜய் நடித்த லியோ திரைக்கு வந்து, வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பலவிதமான சர்ச்சைகள், சங்கடங்களுக்கு பின் இந்த படம் திரைக்கு வந்தாலும், ரசிகர்களை பொருத்த வரை இந்த படத்தில் விஜயை கொண்டாடி தீர்க்கின்றனர். விஜய், தன் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் நடிப்பை தந்திருக்கிறார்.
லியோ படம், படத்தின் பாதி வரை விறுவிறுப்பு குறையாத லோகேஷ் கனகராஜ் படமாகவும், இடைவேளைக்கு பிறகு பெரும்பாலும் வழக்கமான விஜய் படமாகவும் இருப்பதாக தெரிகிறது. அதிலும், சண்டை காட்சிகள் பிரமிக்க வைப்பதாக இருந்தாலும், 300 பேர், 400 பேரை விஜய் ஒருவராக அடித்து வீழ்த்துவது எல்லாம் பக்கா சினிமாத்தனமாக இருக்கிறது.
எப்படி இருப்பினும், முதல் நாள் வசூலில், பல படங்களின் சாதனைகளை கடந்து பாக்ஸ் ஆப் ரெக்கார்டு செய்திருக்கிறது. ஆனால், 3ம் நாளான இன்றே லியோ திரையிட்டுள்ள பல தியேட்டர்களில் ரசிகர் கூட்டத்தை பெரும்பாலும் காண முடியவில்லை. குறிப்பாக லியோ படத்துக்கு ரிபீட் ஆடியன்ஸ் என்பதை எதிர்பார்க்க அதிக வாய்ப்பில்லை.
லியோ படத்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் முத்தக்காட்சியில் நடித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. கடைசியாக அவர் குஷி படத்தில், ஜோதிகாவுடன் இப்படி ஒரு முத்தக்காட்சியில் நடித்த நிலையில், லியோ படத்தில் திரிஷாவுடன் மிக உணர்ச்சிக்கரமான காட்சியில், முத்தக்காட்சியில் நடித்து ரசிகர்களை ஆனந்தமும், ஆச்சரியமும்படுத்தி விட்டார்.
லியோ படத்தை தொடர்ந்து, இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருகிறார். வசீகரா படத்துக்கு பிறகு விஜய்க்கு சிநேகா ஜோடியாக நடிக்கிறார். மீனாட்சி சவுத்ரி, வில்லனாக மோகன் நடிக்கின்றனர். பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு ஆயுத பூஜை ஸ்பெஷல் பரிசாக வரும் திங்கள் அல்லது செவ்வாய் அன்று, சர்ப்ரைஸ் ஆக ஒரு வீடியோ வெளியிடப்படுகிறது. அது விஜய் தற்போது நடிக்கும் விஜய் 68 படத்தின் துவக்க விழா பூஜை வீடியோ, ரசிகர்களுக்காக வெளியிடப்படுகிறது. படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசையுடன் படத்துவக்கவிழா வீடியோவை ரசிகர்களுக்கு தந்து, அசத்த திட்டமிட்டு இருக்கிறார் விஜய். ஏனெனில், கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று நடந்த இவ்விழா குறித்த எந்த புகைப்படமும், வீடியோவும் இதுவரை கசியாத நிலையில், தனது ரசிகர்களுக்கு பரிசாக இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்திருக்கிறார் விஜய்.





