நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய போது மீண்டும் ஒரு நடிகர் கட்சி துவங்கினார் என்றுதான் அதிமுக திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் சாதாரணமாக நினைத்தன. ஆனால் கட்சி துவங்கிய 2 ஆண்டுகளிலேயே தவெக கட்சியின் விஸ்வரூபமும் மக்கள் அளித்த அமோக ஆதரவும் வரவேற்பும் இப்போது அக்கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்க தயாராகி விட்டது.
சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு முன்பு வரை தவெக 10 முதல் 15 தொகுதிகள் ஜெயிக்கலாம் என்றுதான் அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். கருத்து கணிப்புகளிலும் திமுக அல்லது அதிமுக தான் ஆட்சியமைக்கும் என்றும் கூறினர். ஆனால் தேர்தல் களத்தில் தனித்து நின்ற தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அடுத்த 5 ஆண்டுகளை தமிழகத்தை ஆட்சி செய்ய உள்ளது.
ஆனால் தவெக மொத்தமே 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், விஜய் தனது ஆட்சியை அமைக்க மற்ற கட்சிகள் உதவும் சூழல் நிலவுகிறது. அப்படி உதவும் பட்சத்தில் நிச்சயமாக அவரால் ஒரு சிறப்பான ஆட்சியை தர முடியும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அந்த வகையில் முதல் வாய்ப்பாக நடிகர் விஜய்க்கு ஆட்சியமைக்க இன்னும் 10 சீட்டுகள் தேவைப்படுகின்றன. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் பாமக 5 காங்கிரஸ் 5 என அந்த 2 கட்சிகளும் 10 தொகுதிகளுடன் ஆதரவு தர முன் வந்தால் 118 என்ற எண்ணிக்கையுடன் நடிகர் விஜய் ஆட்சி அமைக்க முடியும்.
அடுத்து 2வது வாய்ப்பாக தவெக கட்சியுடன் பாமக 5 தொகுதிகள், இந்திய முஸ்லிம் லீக் 2 தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள் என 11 தொகுதிகள் ஆதரவு தர முன் வந்தால் 119 என்ற எண்ணிக்கையுடன் நடிகர் விஜய் ஆட்சியமைக்க முடியும். 3வது வாய்ப்பாக காங்கிரஸ் 5 இந்திய முஸ்லிம் லீக் 2 சிபிஐ 2 சிபிஎம் 2 என 11 தொகுதிகள் ஆதரவு தந்தால் 119 தொகுதிகளுடன் நடிகர் விஜய் ஆட்சி அமைக்க முடியும்.
இதற்கிடையே பாமக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு இல்லாமல் நேரடியாக தவெக கட்சிக்கு அதிமுக ஆதரவு தரும் பட்சத்தில் அதிமுக வசம் 45 தொகுதிகள் உள்ளன. எனவே 153 தொகுதிகளுடன் நடிகர் விஜய் ஆட்சி அமைக்கலாம். இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் ஆட்சி அமைக்காமல் தடுக்க அதிமுகவும் திமுகவும் இணைந்து களத்தில் இறங்கி கூட்டணி அமைத்தால் அவர்கள் 126 தொகுதிகளுடன் ஆட்சி அமைக்க முடியும் என்று ஒரு தகவல் வைரலாகிறது. ஆனால் திமுக – அதிமுக பரம்பரை எதிர்க்கட்சிகளாக இருப்பதால் நிச்சயமாக அதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.





