சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் “நான்தான் இருக்கேன்ல” என்று முன்னால் வந்து நிற்பவர் விஜய் சேதுபதி. இவ்வாறு அவர் பல திரைப்படங்களில் கேமியோ ரோல் செய்துவிட்டார். ஒரு தொலைக்காட்சி தொடரில் கூட அவர் ஒரு காட்சியில் குரலாக வந்திருந்தார்.

“அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சீரீயலிலேயே கேமியோ ரோல் பண்ணிட்டாரே” என்று பலரும் கேலி செய்தனர். அதே போல் விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லனாகவும் நடித்து வருகிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் ஒரு சோகம் என்னவென்றால் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிற திரைப்படங்கள் சமீப காலமாக சரியாக ஓடுவதில்லை. ஆனால் அவர் வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் மாஸ் ஹிட் ஆகின்றன.
அது மட்டுமல்லாது, விஜய் சேதுபதி தற்போது இந்திய சினிமாவின் மிகவும் பிசியான நடிகராக வலம் வருகிறார். ஹிந்தியில் “மெர்ரி கிருஸ்துமஸ்”, “மும்பைக்கர்”, “ஜவான்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, தமிழில் தற்போது ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் “காக்கா முட்டை” மணிகண்டன் இயக்கும் ஒரு வெப் சீரீஸிலும் நடித்து வருகிறாராம்.

இதில் “காக்கா முட்டை” இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் வெப் சீரீஸை குறித்த ஒரு முக்கிய தகவலை வலைப்பேச்சு சக்தி தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கி வரும் வெப் சீரீஸின் படப்பிடிப்பு தேனி, உசிலம்பட்டி ஆகிய பகுதிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் மணிகண்டன் மேலே உள்ள மரியாதை காரணமாக அவரது புராஜெக்ட்டுகளில் நடித்து வந்தாலும், குறிப்பாக இந்த வெப் சீரீஸில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு காரணமாக இருப்பது, இந்த வெப் சீரீஸில் நடிக்க விஜய் சேதுபதி இருபது கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார்” என்று வலைப்பேச்சு சக்தி கூறியுள்ளார்.

மேலும் இந்த தகவலை குறித்து பேசிய வலைப்பேச்சு பிஸ்மி, “இந்த வெப் சீரீஸை ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது. மணிகண்டன் தயாரித்தார் என்றால் விஜய் சேதுபதி இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கேட்டிருக்க மாட்டார். ஹாட்ஸ்டார்தானே, பெரிய கார்ப்ரேட் நிறுவனம் என்பதால் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





