- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெய ஜெய ஜெய ஹே மலையாள பட இயக்குனருடன் இணையும் மக்கள் செல்வன்... கங்கனாவும் நடிப்பதால்...

ஜெய ஜெய ஜெய ஹே மலையாள பட இயக்குனருடன் இணையும் மக்கள் செல்வன்… கங்கனாவும் நடிப்பதால் அடுத்த குடும்ப ஆக்சன் காமெடி ரெடி…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனது யதார்த்தமான நடிப்பினாலும், இயல்பான பேச்சினாலும் கவனிக்கப்பட்டவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த அவர், தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் நாயகனாக பலராலும் அறியப்பட்டார். தொடர்ந்து அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் திரைப்படங்கள் வெற்றியடைய, தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்கள் பட்டியலில் சேர்ந்தார். 2013 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியாகிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம், விஜய் சேதுபதியை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. கோகுல் இயக்கத்தில் உருவான அந்த திரைப்படத்தில், சுமார் மூஞ்சி குமாராக நடித்திருந்த அவர் காமெடியில் அதகளம் செய்திருந்தார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசியிருந்த அவர், தன்னிடம் இருந்த அனைத்து தடங்கல்களையும் உடைத்துக் கொண்டு வெளியே வருவதற்கு சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரம்தான் உதவியாக இருந்தது என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், ஆரஞ்சு மிட்டாய் திரைப்படங்கள் மூலம் அறியப்பட்ட விஜய் சேதுபதியை, மக்கள் செல்வனாக மாற்றியது நானும் ரவுடிதான் திரைப்படம்தான். தனது கலகலப்பூட்டும் நடிப்பினாலும், நயன்தாராவை துரத்தி துரத்தி காதலிக்கும் இளைஞராகவும் மக்கள் மனதில் நின்றார் இந்த மக்கள் செல்வன். காதல் ரசம் சொட்ட சொட்ட நகைச்சுவை பாணியில் உருவாகியிருந்த இந்த திரைப்படம், திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கோலம் பூண்டது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, அருண்குமார் இயக்கத்தில் சேதுபதி திரைப்படம், நளன் குமாரசாமி இயக்கத்தில் காதலும் கடந்து போகும், சீனு ராமசாமி இயக்கத்தில் தர்மதுரை, மணிகண்டன் இயக்கத்தில் உருவான ஆண்டவன் கட்டளை மற்றும் விக்ரம் வேதா என அத்தனை திரைப்படங்களும் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தீனி போடுவதாய் அமைந்தன. இது மட்டுமல்லாமல், ஜனரஞ்சகமான திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் அவர் உருவாக்கினார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய அவர், அடுத்தடுத்த படங்களில் நடித்து தள்ள, வாரத்திற்கு ஒரு விஜய் சேதுபதி படத்தை வெள்ளித்திரையில் பார்க்க முடிவதாக ரசிகர்கள் கலாய்க்க தொடங்கினர். அதற்கேற்றார் போல, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜூங்கா போன்ற திரைப்படங்கள் தோல்வியை தழுவியதால் சற்று தடுமாறினார் விஜய் சேதுபதி.

- Advertisement -

இந்த சமயத்தில் மாஸ்டர் படம் வெளியாகி விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. விஜய்க்கு வில்லனாக பவானி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க, அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் திரையரங்கை அதிர வைத்தது. இதைத் தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் வரவேற்பை பெறாததால், வில்லன் கதாபாத்திரங்களுக்கு தற்போது முக்கியத்துவம் அளித்து வருகிறார். ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாகும் அவர், மேரி கிறிஸ்மஸ் திரைப்படம் மூலம் கத்ரீனா கைப் உடனும் ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படத்தின் இயக்குனருடன், விஜய் சேதுபதி இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. குடும்பத்தில் கணவரின் துன்புறுத்தலை பொறுத்து பொறுத்துப் போகும் மனைவி, ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தால் என்ன ஆகும் என்பதை ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் மூலம் நகைச்சுவை கலந்து கொடுத்திருப்பார் இயக்குனர் விபின் தாஸ். அவர் தமிழில் அறிமுகமாக திட்டமிட்டு இருக்கும் நிலையில், விஜய் சேதுபதியை தனது கதையின் நாயகனாக வைக்க முடிவெடுத்துள்ளார். மேலும் இதில் பாலிவுட் நடிகை கங்கனாவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பிரீ ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் சூட்டிங் ஆரம்பமாகும் என தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்