நடிகர் விஜய் சேதுபதி, நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் துணை நடிகராக பத்தோடு பதினொன்றாக நின்றவர். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களில் அவர் நடித்தது அப்போது தெரியாது. இப்போது பார்த்தால்தான், விஜய் சேதுபதிதானே இவர், என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும்.
அப்படியிருந்த விஜய் சேதுபதிக்கு, தென்மேற்கு பருவக்காற்று கதாநாயகன் அந்தஸ்தை பெற்றுத் தந்தது. அடுத்து சூது கவ்வும், பீட்சா, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படங்களால், ஒரு பிரபல நடிகராக ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.
அடுத்து தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, ரெக்க போன்ற படங்களில் நடிக்க ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் வலம்வந்தார். முன்னணி கதாநாயகனாகவும் உயர்ந்தார். ஆனால் தொடர்ந்து ஹீரோ கேரக்டர்களில் நடிக்காமல், வில்லன் வாய்ப்புகளுக்கும் ஓகே சொன்னார். ஏனென்றால் வில்லனாக நடிக்க இரட்டிப்பு சம்பளம் கிடைத்ததுதான் காரணம்.
இதையடுத்து பேட்ட படத்தில் ரஜினிக்கும், விக்ரம் படத்தில் கமலுக்கும், மாஸ்டர் படத்தில் விஜய்க்கும், ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்தார். அதுமட்டுமின்றி பல படங்களில் சில நிமிட காட்சிகளில் வந்து செல்லும் கேமியோ ரோல்களிலும் விஜய் சேதுபதி நடித்தார். இது ஒரு கட்டத்தில், அவரது தொழிலுக்கே வில்லனாக அமைந்தது.
மற்ற நடிகர்களில் கேமியோ ரோலில் பார்த்து, பார்த்து இவரது படங்களுக்கும் வருபவர்களும், இதுவும் கேமியோ ரோலாக இருக்கும் என வர மறுக்கின்றனர். தவிர ஹீரோ வாய்ப்பை விட கேமியோ ரோல் வாய்ப்புகளே அதிகமாக வந்ததால், மார்க்கெட் இழக்கவும் அது காரணமாகி விட்டது. அதனால், சமீபத்தில் இனி வில்லன், கேமியோ ரோல்களில் நடிப்பதில்லை என திட்டவட்டமாக விஜய் சேதுபதி அறிவித்துவிட்டார்.
ஆனால் தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அஜீத்குமார் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு வந்துள்ளது. மார்க் ஆண்டனி படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு கிடைத்தது போன்ற ஒரு வித்யாசமான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் விஜய் சேதுபதி நோ சொல்லிவிட்டார். இப்போது அந்த கேரக்டரில் நடிக்க எஸ்ஜே சூர்யா, அரவிந்த் சாமியிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. அஜீத் படத்தில், நடிக்க கிடைத்த வாய்ப்பு அருமையானது. நிச்சயம் அதில் நடித்திருந்தால், பழைய இமேஜ் கிடைத்திருக்கும். இப்படி மிஸ் பண்ணிட்டாரே, என அவரது ரசிகர்கள் புலம்பி தீர்க்கின்றனர்.





