தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் சிறந்த நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. துவக்கத்தில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்து வந்த அவருக்கு, தென்மேற்கு பருவக்காற்று படம்தான் நல்ல அடையாளத்தை கொடுத்தது. அந்த படத்தில்தான் முதல் தடவையாக கதையின் நாயகனாக அவர் நடித்திருந்தார்.
தொடர்ந்து சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல படங்கள் விஜய் சேதுபதிக்கு நல்ல ஒரு அடையாளத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுத்தது. குறிப்பாக தர்மதுரை, கருப்பன், காதலும் கடந்து போகும், ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் விஜய் சேதுபதி வாழ்ந்திருந்தார்.
கதாநாயகனாக மட்டுமின்றி வில்லனாகவும் பேட்ட, விக்ரம், மாஸ்டர், இந்தியில் ஜவான் போன்ற படங்களில் நடித்த விஜய் சேதுபதிக்கு, திடீரென மிகப்பெரிய சறுக்கல், அவரது திரைபயணத்தில் ஏற்பட்டது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வந்த அவர், ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளே இல்லாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த சூழலில், இனி நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற முடிவுக்கு வந்துவிட்ட விஜய் சேதுபதி இப்போது விடுதலை 2, மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன், ஜூன் 14ம் தேதியன்று விஜய் சேதுபதி நடித்த அவரது 50வது படம் மகாராஜா வெளியானது.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் டைரக்ஷனில் உருவான மகாராஜா படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படத்தில் நடித்த நட்டி, சிங்கம்புலி, அபிராமி, அனுராக் காஷ்யப், முனீஸ்காந்த், மம்தா மோகன்தாஸ் ஆகியோருக்கு, அவர்களது திரைப் பயணத்தில் இது மிக முக்கிய படமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக விஜய் சேதுபதிக்கு, இந்த சூழலில் இது முக்கியமான வெற்றியை தந்து, அவரை கைதூக்கி விட்டிருக்கிறது.
சமீபத்தில் வெளியான படங்களில், அரண்மனை 4 படம் மட்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்று, ரூ. 100 கோடி வசூலித்தது. அதன்பிறகு சூரி நடிப்பில் வெளிவந்த கருடன் படமும், ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள மகாராஜா படம், 10 நாட்களில் உலகளவில் மொத்தம் 76 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இது நிச்சயம் சில தினங்களில் 100 கோடி ரூபாயை எட்டிவிட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





